என் புகழுக்கு பாஜ களங்கம் ஏற்படுத்த நினைக்கிறது மூடா மாற்று நில விவகாரத்தில் எனது பங்கு எதுவுமே இல்லை: முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: மூடா முறைகேடு விவகாரத்தில் தனது ரோல் எதுவுமில்லை என்றும், தன் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், 2வது முறையாக தான் முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் மீது வெறுப்பை உமிழ்வதாகவும் பாஜ மீது முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டதற்காக மைசூரு மாநகர வளர்ச்சிக்குழுமம் மாற்று நிலம் ஒதுக்கியது.

மாநகரின் விரிவாக்கத்திற்காக மாநகரின் வெளியே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாற்றாக, மாநகரின் முக்கியமான ஆடம்பர பகுதியில் மாற்று நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், முதல்வர் மனைவிக்கு மாற்று நிலம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பாஜ குற்றம்சாட்டியது. இந்த மாற்று நிலம் 2021ம் ஆண்டு முந்தைய பாஜ ஆட்சியில் தான் ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கும் தனக்கோ, காங்கிரஸ் ஆட்சிக்கோ எந்த சம்பந்தமும் இல்லை என்றும் முதல்வர் சித்தராமையா தெளிவுபடுத்தியிருந்தார்.

மேலும், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுத்தான் மாற்று நிலம் பெறப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஆவண ஆதாரங்களும் முதல்வர் தரப்பில் வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக விசாரிக்க முதல்வர் சித்தராமையா ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்தார். ஆனாலும் இந்த விவகாரத்தை அத்துடன் விடாமல், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

சட்டப்பேரவையிலும் இவ்விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்திய பாஜ, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். ராஜ் பவனுக்கு நடந்தே சென்று ஆளுநரிடம் மனு கொடுத்தனர். மேலும், மூடா முறைகேட்டிற்காக முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி பெங்களூருவிலிருந்து பாஜ மற்றும் மஜதவினர் மைசூருவிற்கு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே விளக்கமளித்துவிட்ட முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரத்தில் தனது ரோல் எதுவுமில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, மூடா மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் எனது ரோலோ அல்லது என் மனைவி அல்லது மைத்துனர் ரோலோ ஏதாவது இருக்கிறதா? மூடா எங்களுடைய நிலத்தை கையகப்படுத்தியது. எனவே எங்களுக்கு அதற்கு மாற்றாக மாற்று நிலத்தை ஒதுக்கி கொடுத்தது. இதில் என்ன முறைகேடு அல்லது விதிமீறல் நடந்திருக்கிறது? மாற்று நில விவகாரத்தில் எனது ரோல் எதுவுமே இல்லை. அது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமான நடைமுறை.

பாஜவும் மஜதவும் அரசியலுக்காக என்னைப் பற்றி பொய் பிரசாரங்கள் செய்துவருகின்றன. நான் 2வது முறையாக முதல்வரானதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் என் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்றனர். 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜ தோற்றுவிட்டது. மக்களவை தேர்தலிலும் பின்னடைவை சந்தித்தது.

அதைத் தாங்க முடியாமல் தான் இதையெல்லாம் செய்கிறது. பாஜவை பார்த்து நான் ஒன்று மட்டும் கேட்க விரும்புகிறேன். இப்போது போராடும் பாஜ, கர்நாடக மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக போராடியிருக்கிறதா? ஒன்றிய பட்ஜெட்டில் கர்நாடகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடினார்களா? என் மீதான வெறுப்பை உமிழ்வதும், என்னை பழிவாங்குவதுமே பாஜ போராட்டங்களின் நோக்கம் என்று முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

* ஊழலின் தலைமை பாஜ டி.கே.சிவகுமார் தாக்கு
இதுதொடர்பாக பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பெறும் என்று பாஜ ஒருபோதும் நினைக்கவில்லை. காங்கிரசின் வெற்றியை பொறுக்க முடியாத பாஜ, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக சதி செய்கிறது. முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜவும், அதன் கூட்டணி கட்சியான மஜதவும் சேர்ந்து பெங்களூருவிலிருந்து மைசூரு வரை நடைபயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.

அவர்களால் (பாஜ) முடிந்தவரை எத்தனை நடைபயணம் வேண்டுமானாலும் செல்லட்டும். எங்களுக்கு எதிரான அவர்களது பிரசாரங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்றார். நிலம் கையகப்படுத்துதலில் நிலத்தை இழந்த பல பேருக்கு மாற்று நிலங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் எப்படி மாற்று நிலம் பெற்றார்கள் என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர் விளக்கமளிப்பார். நானும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

இழந்த நிலத்திற்கு முதல்வர் மாற்று நிலம் கேட்டதற்காக மூடா மாற்று நிலம் ஒதுக்கியிருக்கிறது. அந்த நடைமுறைகள் அனைத்தும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் நடைபயணத்தை பாஜ காப்பி அடிக்கிறது. காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்ரா முறையை பாஜ பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. ஊழலின் தலைமையே பாஜ தான். பாஜ ஆட்சியில் யார் யாருக்கு எங்கு எங்கு எத்தனை நிலங்கள் ஒதுக்கப்பட்டது என்ற ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என்றார்.

The post என் புகழுக்கு பாஜ களங்கம் ஏற்படுத்த நினைக்கிறது மூடா மாற்று நில விவகாரத்தில் எனது பங்கு எதுவுமே இல்லை: முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: