3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

சென்னை: 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிக்கப்பட்டது. ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்ததுடன் சட்டப் பிரிவுகளின் எண்களையும் மாற்றம் செய்துள்ளது. இது நாடெங்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் சங்க அவசர பொதுக்குழு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் வி.எம்.ரகு மற்றும் மூத்த, இளைய செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திங்கள் கிழமை (இன்று) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

பெரும்பாலான நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்ற பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணை தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் ஜி.எம்.ரகு மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் 3 சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி உயர்நீதிமன்ற ஆவின் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி உயர்நீதிமன்றத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

The post 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: