மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏரல் அரசு மருத்துவமனை மகப்பேறு அரங்கம் மீண்டும் செயல்பட துவங்கியது

ஏரல், ஜூலை 8: மழை, வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் அரசு மருத்துவமனை மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கம் சீரமைக்கப்பட்டு 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. கடந்த வருடம் டிச.17,18ம் தேதி பெய்த கனமழை, வெள்ளத்தில் ஏரல் அரசு சமுதாய நல மையம் தண்ணீரில் மூழ்கி பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கம் முற்றிலும் சேதமடைந்ததால் செயல்படாமல் இருந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் முயற்சியாலும், மாவட்ட குடும்பநல இணை இயக்குநர் பொன்ரவி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கம் தற்சமயம் சீரமைக்கப்பட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டு தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். பண்டாரவிளை ஆரம்ப சுகாதார நிலைய மகப்பேறு மருத்துவ அலுவலர் கார்த்திகா, மயக்கவியல் நிபுணர் வந்தனா ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.  மேலும் மற்றொரு பெண்ணுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏரல் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு அறுவை சிகிச்சை மையத்தை பயன்படுத்தி கொள்ள மூத்த மருத்துவர் டாக்டர்
ராஜேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏரல் அரசு மருத்துவமனை மகப்பேறு அரங்கம் மீண்டும் செயல்பட துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: