ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு

திருமலை: ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இரு மாநிலத்திற்கான சொத்துகள், நிலம், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை பிரிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் 9 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராகவும், ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் முதல்வராகவும் இருந்தனர். ஐதராபாத் இருமாநிலத்தின் தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த 10 ஆண்டுகளும் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த பிரிவினை மசோதாக்கள்படி கட்டாயம் தீர்வு காண வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடுவின் சீடர் என கூறப்படும் ரேவந்த் ரெட்டியும் முதல்வர்களாக பதவியில் உள்ளனர். இருமுதல்வர்களும் வெவ்வேறு கட்சி, கூட்டணியில் இருந்தாலும் இருவருக்கும் உண்டான நட்புறவு மூலமாக இரு மாநில பிரச்னைக்கு சுமூக தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. அதன்படி சந்திரபாபு நாயுடு, நேற்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தார். ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த இந்த சந்திப்பில் இருமாநில முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7.45 மணி வரை நடந்தது. இந்நிலையில் மாநில சொத்துக்கள் பிரிப்பு தொடர்பாக இருமாநிலத்தினரும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளனர். அதன்பின் ஓரிருநாட்களில் இருமாநிலம் சார்பில் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவினர் இந்த வார இறுதிக்குள் பேச்சுவார்த்தையை தொடங்குகின்றனர் என ஆந்திர அரசு அதிகாரிகள் ெதரிவித்தனர்.

The post ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: