ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி: ஜனநாயகத்தில் வெற்றி, தோல்விகள் சகஜம் என்று இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இங்கிலாந்தில் நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி, ஆட்சியில் இருந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்திய வம்சாவளியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர் பதவியேற்றார். இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னாள், இந்தாள் என இரண்டு பிரதமர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். புதிய பிரதமர் கியர் ஸ்டார்மர்க்கு எழுதிய கடிதத்தில், `தொழிலாளர் கட்சிக்கும் தனிப்பட்ட ரீதியிலும் உங்களின் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வெற்றி மக்களை முதன்மைப்படுத்தும் அரசியலின் சக்திக்கு ஒரு சான்றாகும். மேலும் இந்தியா – இங்கிலாந்து இருதரப்பு உறவை தொடர்ந்து வலுப்படுத்துவதையும் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல் ரிஷி சுனக்கிற்கு எழுதியிருக்கும் மற்றொரு கடிதத்தில், `சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து எனது கருத்துகளை நீட்டிக்க விரும்புகிறேன். வெற்றிகள் மற்றும் பின்னடைவுகள் இரண்டும் ஜனநாயகத்தில் பயணத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகும். இரண்டையும் நாம் நமது முன்னேற்றத்துக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் சேவையில் உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.உங்கள் பதவிக் காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் அனுபவத்துடன் பொது வாழ்வில் தொடர்ந்து பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

The post ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: