தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் காஞ்சிபுரம் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு

காஞ்சிபுரம், ஜூலை 7: உலக பிரசித்தி பெற்ற கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென்று கோரி பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற கோயில் நகராகவும், பட்டு நகராகவும், பாரம்பரிய நகராகவும் விளங்குவதால், புகழ்மிக்க கோயில்களை சுற்றிப் பார்க்கவும், பட்டுச்சேலை வாங்கவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்திற்கு போதுமான ரயில் வசதி இல்லாததால் சென்னை சென்ட்ரல் அல்லது எழும்பூருக்குச் சென்று அங்கிருந்து வேறு வாகனங்கள் மூலம் காஞ்சிபுரம் வந்தடைகின்றனர். மேலும் சிலர் கார், வேன் பேருந்தின் மூலம் வந்து செல்கின்றனர். இதனால் வயதான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஆவடி, தாம்பரத்திற்கு அடுத்ததாக மாநகராட்சி அந்தஸ்து பெற்ற முக்கிய நகரமாக காஞ்சிபுரம் இருந்தும் தினசரி எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் காஞ்சிபுரத்திற்கு இயக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக தென்தமிழக நகரங்களான திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தென்காசி, காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு தினசரி பயணிகள் ரயில் சேவை இல்லை. இதேபோல் திருவண்ணாமலை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கும் ரயில் சேவை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும், காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள ஸ்ரீபெரும்புதூர், செய்யாறு போன்ற ஊர்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வர சிரமம் ஏற்படுகிறது.

மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு வேலை, வியாபாரம், தொழில், மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு நிமித்தமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். ஆனால், சென்னைக்குச் செல்வதற்கு போதுமான புறநகர் ரயில் சேவை இல்லை. குறிப்பாக காஞ்சிபுரத்தில் இருந்து காலை 11.20 மணியில் இருந்து மாலை 5.50 மணிவரை சென்னை புறநகர் ரயில் சேவை இல்லை. எனவே பயணிகள் தாம்பரம், கோயம்பேடு, பூந்தமல்லி ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, காஞ்சிபுரத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.30, பிற்பகல் 1.30, மாலை 3.30 மற்றும் 5 மணிக்கு புதிய புறநகர் ரயில் சேவை தொடங்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – சென்னை கடற்கரை – அரக்கோணம் – காஞ்சிபுரம் வட்ட ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அரக்கோணம் – பேசின் பிரிட்ஜ் வழியாக புதிய புறநகர் ரயில் இயக்க வேண்டும். காஞ்சிபுரம் நகரின் கலாச்சாரம், ஆன்மிகம், பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அண்டை மாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு சுற்றுலா ரயில்கள் இயக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும்.

காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு டெம்பிள் சிட்டி அல்லது சில்க் சிட்டி என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு, சேலம், ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை காஞ்சிபுரத்தில் இருந்து இயக்க வேண்டும். செங்கல்பட்டில் இருந்து கச்சிகுடாக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை காஞ்சிபுரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு தேவையான கூடுதல் ரயில்வே பிளாட்பாரங்கள் உள்ளிட்ட வசதிகளையும் காஞ்சிபுரத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பெர்ரி அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு, சேலம், ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை காஞ்சிபுரத்தில் இருந்து இயக்க வேண்டும். செங்கல்பட்டில் இருந்து கச்சிகுடாக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை காஞ்சிபுரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் காஞ்சிபுரம் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Related Stories: