வருமானவரித்துறை சோதனையில் அம்பலம் கேரளா கார் ஷோரூம்களில் ரூ.102 கோடி கருப்புப்பணம்: கிரிக்கெட் வீரர், நடிகர்களுக்கு தொடர்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கார் ஷோரூம்களில் ரூ.102 கோடிக்கு கருப்புப் பணம் புழக்கத்தில் விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் முஜீப் ரகுமான். இவருக்கு திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்ட கார் ஷோரூம்கள் உள்ளன. இங்கு சாதாரண கார்கள் முதல் விலை உயர்ந்த கார்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கார் ஷோரூம்களில் சிலர் கருப்புப் பணத்தை முதலீடு செய்வதாக கோழிக்கோடு வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கார் ஷோரூம்களில் கோழிக்கோடு வருமான வரித்துறையினர் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சில விஐபிகள் தங்களது விலை உயர்ந்த சொகுசு கார்களை ஒன்று அல்லது 2 வருடங்கள் பயன்படுத்திவிட்டு ஷோரூம்களில் விற்பனை செய்து விடுவார்கள். அதற்கான பணத்தை கணக்கில் காண்பிக்காமல் கருப்புப் பணமாக வாங்குவார்கள். மேலும் சிலர் இங்கிருந்து கார்களை வாங்கி அதற்கு கருப்பு பணத்தை கொடுப்பார்கள். இதையும் கணக்கில் காட்டுவதில்லை. இந்த மோசடியில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர், மலையாளம், தமிழ் உள்பட சினிமா நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கோழிக்கோடு வருமானவரித்துறை அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர்.

The post வருமானவரித்துறை சோதனையில் அம்பலம் கேரளா கார் ஷோரூம்களில் ரூ.102 கோடி கருப்புப்பணம்: கிரிக்கெட் வீரர், நடிகர்களுக்கு தொடர்பு appeared first on Dinakaran.

Related Stories: