2 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி காவல் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம்: காதலனை கரம் பிடித்தார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வின் தேவகுமார். அவரது மகள் பெமிஷா (23). எம்.ஏ. பட்டதாரி. அவரும், மேற்கு நெய்யூரை சேர்ந்த ராம் (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ராம் பி.இ., முடித்து விட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக உள்ளார். வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் தனது காதலன் ராமுடன் பெமிஷா அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். மேலும் காதலன் ஊருக்கு வரும் சமயங்களில் ரகசியமாக சந்தித்தும் வந்தார். இந்த காதல் விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு, பெமிஷாவின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால் பெமிஷா, காதலை கைவிட மறுத்தார். அவரை பெற்றோர் சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் பெமிஷாவை வீட்டில் சிறை வைத்தனர். தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்தும் வந்தனர். இதனால் வேறு வழியின்றி, பெமிஷா திருமணத்துக்கு சம்மதம் தெரிவிப்பது போல் நடிக்க தொடங்கினார். மகளின் விருப்பம் கிடைத்து விட்டது என்று எண்ணி, பெமிஷாவின் பெற்றோர் திருமண ஏற்பாடுகளில் வேகமாக இறங்கினர். உறவினர் ஒருவரின் மூலம் மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. அழைப்பிதழ் அச்சடிப்பு, நிச்சயதார்த்தம் முதல் அனைத்து ஏற்பாடுகளும் கோலாகலமாக நடந்தது. திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டு வருகிற 8ம் தேதி, திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்துக்கான நகைகள், புதிய ஆடைகள் தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்திலும் பெமிஷா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால் மகள் மீதான சந்தேகத்தில், பெமிஷாவை தொடர்ந்து வீட்டு சிறையில் தான் பெற்றோர் வைத்திருந்தனர். அவர் வெளியே சென்றாலும் கூட உடன் அவரது குடும்பத்தினர் சென்று வந்தனர்.திருமணத்துக்கான நாள் நெருங்க, நெருங்க பெமிஷாவின் மனதில் ஒரு வித பதற்றம் தொற்றிக் கொண்டது. இதை அவரது வீட்டில் உள்ளவர்களும் கவனித்து, பெமிஷா மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். திருமணத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் உறவினர்கள் வர தொடங்கினர். இனியும் அமைதியாக இருந்தால், தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடந்து விடும். எனவே வீட்டில் இருந்து தப்புவதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்த, பெமிஷா இது தொடர்பாக காதலனுக்கும் தகவல் அனுப்பினார். இதையடுத்து அவரும் பெங்களூருவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை, வீட்டின் பின்புற பகுதியில் நின்று கொண்டிருந்த பெமிஷா, திடீரென சுவர் ஏறி வெளியே குதித்து தப்பினார். கண் இமைக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து தப்பிய அவர், நேராக குளச்சல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

தனது காதல் விவகாரங்களை போலீசாரிடம் கூறிய அவர், வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருந்த தகவலையும் தெரிவித்தார். சட்டப்படி மேஜர் என்பதால், தனது காதலை சேர்த்து வைக்க வேண்டும் என கூறினார். இந்த தகவல் அறிந்து காதலன் ராமும் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடமும் விசாரித்த போலீசார், இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்தனர். மகளை காணாமல் தேடி வந்த நிலையில், மகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த தகவல் அறிந்து பெமிஷாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காவல் நிலையத்துக்கு சென்று, மகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறினர். ஆனால் பெமிஷா, காதலன் ராமுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டார். இருவரும் சட்டப்படி மேஜர் என்பதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என கூறி போலீசார், காதல் ஜோடியிடம் முறைப்படி பதிவு திருமணம் செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தனர். காதல் ஜோடிக்கு எந்த வித தொந்தரவும் அளிக்க கூடாது. மீறி அவர்களை இடையூறு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இரு தரப்பு பெற்றோரையும் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்து பெமிஷா தனது காதலன் ராமுடன் சென்றார்.

 

The post 2 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி காவல் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம்: காதலனை கரம் பிடித்தார் appeared first on Dinakaran.

Related Stories: