அம்ரித் பாரத் திட்டத்தில் கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு: செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கிண்டி ரயில்வே நிலையம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறனர். மேலும் இந்த ரயில் நிலையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி மற்றும் சென்னையின் மையத்தில் உள்ள பிற முக்கிய கல்வி நிறுவனங்களை இணைக்கும் ஒரு முக்கியமான ரயில் நிலையமாக செயல்படுகிறது. இவை தவிர கிண்டி ரேஸ் கிளப், கிண்டி தேசிய பூங்கா, தொழிற்பேட்டை, ராஜ் பவன் மற்றும் காந்தி மண்டபம் ஆகிய முக்கிய இடங்களுக்கு அருகில் கிண்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு வசதிகளுடன் கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை கோட்டத்தில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள சில ரயில் நிலையங்களை அதி நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு நிகராக மறுகட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல சென்னை பூங்கா, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் செயிண்ட் தாமஸ் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்தது. இதன்படி தற்போது ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கிண்டி ரயில் நிலையத்தின் புதிய நுழைவு வாயில் பகுதி குறித்த வரைபடத்தை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் சராசரியாக 60,000 பயணிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக கிண்டி ரயில் நிலையம் இருக்கிறது. சென்னை புறநகரில் இருந்து நகருக்குள் பல்வேறு இடங்களுக்கு செல்லவும் கிண்டி ரயில்வே நிலையம் ஒரு முனையம் போல இருக்கிறது. இதனால், பீக் நேரங்களில் சாரைசாரையாக பயணிகள் செல்வதை காண முடியும். கிண்டி ரயில் நிலையத்தை மேம்பாடு செய்வதற்காக, சுமார் 13.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளை கவரும் விதமாக கிண்டி ரயில் நிலையத்தின் நுழைவு பகுதி மாற்றியமைக்கப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் டிக்கெட் கவுண்டரும் அமைக்கப்பட உள்ளது.

ரயில் நிலையத்தில் மூன்று லிப்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட இருக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்காக அதேபோன்று அதிநவீன சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிரபடுத்தப்பட உள்ளன.

கிண்டி ஸ்டேஷனில் தற்போது வரை கிண்டி ரயில் நிலையத்தில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பழைய பார்க்கிங் பகுதி மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய முன்பதிவு அலுவலகத்திற்கான மேற்கூரை அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3வது, 4வது நடைமேடைகளிலும், ரேஸ்கோர்ஸ் பக்கத்திலும் லிப்ட் நிறுவப்பட்டுள்ளன, மின்சாரம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1 மற்றும் 2வது நடைமேடைகளில் மின்தூக்கி நிறுவும் பணிகளும் நடந்து வருகின்றன.

ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நடைபாதைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 50சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது மற்றும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் முடிக்கப்படும்.

கிண்டி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட அழகியல், சிறந்த இடப் பயன்பாடு, மேம்பட்ட அணுகல், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல நன்மைகளைக் கொண்டு வருகிறது. எனவே, கிண்டி ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு பாதுகாப்பான, திறமையான மற்றும் பயணிகளை மையமாகக் கொண்ட நிலைய சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விமான நிலையம் போல பிரம்மாண்ட நுழைவு வாயில்
ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளும் மறு சீரமைக்கப்பட உள்ளது. இவை தவிர பார்க்கிங் வசதிகள், டிக்கெட் புக்கிங் அலுவலக கட்டிடம், மேற்கூரைகள் மாற்றும் பணிகள், லிப்ட் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. விமான நிலையம் போல பிரம்மண்டாக காட்சி தரும் நுழைவு வாயில் அமைக்கப்படவுள்ளது.

The post அம்ரித் பாரத் திட்டத்தில் கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு: செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் appeared first on Dinakaran.

Related Stories: