கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா

சென்னை: கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் (41). கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான இவர், 19வது வார்டு திமுக மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார். இவரது கணவர் ஆனந்தகுமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர், கோவை மணியக்காரம்பாளையத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். மேயரின் மாமனார் மிசா காலத்தில் சிறை சென்றவர். மேயர் கல்பனா ஆனந்தகுமார், தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நேற்று மாலை வழங்கினார். மேயரின் ராஜினாமாவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவரது இந்த திடீர் முடிவு, கோவை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

நெல்லை மாநகராட்சி திமுக மேயராக பி.எம்.சரவணன் பதவி வகித்து வந்தார். இவருக்கும், கவுன்சிலர்களுக்கும் பனிப்போர் நீடித்தது. இதனால் மாநகராட்சி கூட்டங்களை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இந்நிலையில் மேயர் தலைமையில் கடந்த மாதம் 28ம் தேதி மன்ற கூட்டம் நடந்தது. சாதாரண கூட்டம், அவசர கூட்டம் என இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

40க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் கோரம் இல்லாததால், மாநகராட்சி கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது மேயர் பதவியை நேற்று மாலை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து துணை மேயர் கே.ஆர்.ராஜூ பொறுப்பு மேயராக செயல்படுவார் எனவும், ஜூலை 8ம் தேதி நெல்லை மாநகராட்சி கூட்டம் அவரது தலைமையில் நடத்தப்படும் எனவும் கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தெரிவித்துள்ளார்.

The post கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: