உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

மும்பை: ஐசிசி டி20 உலக கோப்பையை 2வது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்களின் வெற்றி ஊர்வலம் மும்பையில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற உள்ளது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய டி20 உலக கோப்பையின் பரபரப்பான பைனலில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2007ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியனாகி முத்திரை பதித்தது. இந்திய வீரர்கள் உலக கோப்பையுடன் நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், பார்படாஸில் சூறாவளி, புயல், கனமழை என சுழற்றி அடித்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக கடந்த 3 நாட்களாக வெஸ்ட் இண்டீசிலேயே தங்கியிருந்த இந்திய அணியினர், நேற்று ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் தாயகம் புறப்பட்டனர். இந்திய நேரப்படி இன்று காலை 6.20க்கு டெல்லி வரும் இந்திய வீரர்கள், பின்னர் காலை 11.00 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெறுகின்றர்.

அதன் பிறகு விமானம் மூலமாக மும்பை வரும் சாம்பியன்களுக்கு பிசிசிஐ சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 5.00 மணிக்கு மெரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே ஸ்டேடியம் வரை திறந்த பேருந்தில் வெற்றி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உலக சாம்பியன்களை வாழ்த்தி வரவேற்க உள்ளனர்.

The post உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: