வழக்கறிஞர் சேவையை விளம்பரப்படுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: அகில இந்திய பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொதுமக்களின் அன்றாட தேவைகளை ஆன்லைன் மூலமாக வழங்கிவரும் சுலேகா, க்விக்கர், ஜஸ்ட் டயல் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள், வழக்கறிஞர் சேவையையும் வழங்கி வருகிறது. அதற்கு தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும், வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஆன்லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவது தொடர்பாக, விளம்பரங்கள் வெளியிடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும் நான்கு வாரங்களில் அகில இந்திய பார்கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்கள் வெளியிடும் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர் தொழிலை ஒரு வணிகமாக எடுத்துக் கொள்ள முடியாது. நீதியைத் தேடி வருவோர்களுக்கு நீதியை வழங்குவது தான் சட்டத் தொழில். சில வலைதளங்கள் சட்ட தொழிலை ஒரு வணிகமாக குறிப்பிட்டு அதற்கு கட்டணம் நிர்ணயித்து வெளியிடுவது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் மூலமாக சட்ட சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் சேவை தொடர்பான விளம்பரங்களை ஆன்லைன் நிறுவனங்கள் நீக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post வழக்கறிஞர் சேவையை விளம்பரப்படுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: அகில இந்திய பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: