மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது

சென்னை: தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்கள், குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை டிட்டோஜாக் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு வர உள்ள நிலையில், கவுன்சலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ள கவுன்சலிங் அட்டவணையை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்றும் டிட்டோஜாக் அமைப்பு கோரியது. மேலும், ஆசிரியர்கள் உணர்வுகளை புறந்தள்ளி அரசாணை 243ஐ நடைமுறைப்படுத்தும் வகையில் கவுன்சலிங்கை நடத்தினால் டிட்டோஜாக் அமைப்பு போராட்டத்தில் ஈடுபடும் என்றும் எச்சரித்தது.

இந்நிலையில், தொடக்கக் கல்வித்துறை அறிவித்தபடி, கடந்த இரண்டு நாட்களாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங்கை அரசு நடத்தி வருகிறது. இதையடுத்து டிட்டோஜாக் விடுத்த கோரிக்கை மீது அரசு மற்றும் தொடக்க கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்தந்த மாவட்டங்களில் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கும் மையங்களிலும், சாலைகளிலும் டிட்டோஜாக் அமைப்பில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்களை ஆங்காங்கே கைது செய்தனர்.

The post மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: