கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

கூடலூர்: கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் நேற்று சற்று குறைவாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. மழையால் புத்தூர் வயல், தேன் வயல், குனியல் வயல், இருவயல் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூரை அடுத்த தொரப்பள்ளி மற்றும் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட தேன் வயல் மற்றும் குனில் வயல் பகுதிகளில் நேற்று இரவு புகுந்த 2 காட்டு யானைகள் இன்று காலை நேரத்தில் அங்கிருந்து வனப்பகுதிக்கு திரும்பின.

அதிகாலை நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக தேன் வயல் வழியாக ஓடும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் இறங்கிய 2 யானைகளும் ஆற்றை கடந்து வனப்பகுதிக்கு சென்றன. முதுமலை புலிகள் காப்பக வன எல்லையில் உள்ள அகழியை கடந்து கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் இந்த 2 யானைகள் தங்கி இருப்பதாகவும், இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாகவும், இந்த 2 யானைகளையும் அங்கிருந்து வன எல்லையை தாண்டி அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: