ஐசிசி டி20 உலக கோப்பை பைனல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை

* இரவு 8.00 மணிக்கு தொடக்கம்

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, பார்படாஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர், இம்மாதம் 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறின. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறிய நிலையில், கற்றுக்குட்டியான அமெரிக்கா சூப்பர்-8ல் இடம் பிடித்து அசத்தியது. விறுவிறுப்பான இந்த சுற்றின் முடிவில், முதல் பிரிவில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளும், 2வது பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில்… ஆஸ்திரேலியா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா அணிகள் வெளியேற்றப்பட்டன.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதிய தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன் வித்தியாசத்தில் போட்டுத்தாக்கிய இந்திய அணி பைனலில் நுழைந்தது. இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கும் பரபரப்பான பைனலில் இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று மோதுகின்றன. 2007ல் நடந்த முதலாவது டி20 உலக கோப்பையில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. எனினும், அடுத்து நடந்த டி20 உலக கோப்பைகளில் மீண்டும் பட்டம் வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வருகிறது.

மேலும், 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த எந்த உலக கோப்பையிலும் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாதது, சோக வரலாறாகத் தொடர்கிறது. கடைசியாக 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை முத்தமிட்ட இந்தியா, அதன் பிறகு நடந்த ஐசிசி தொடர்களில் சாதிக்க முடியவில்லை. இந்த குறையை ரோகித் தலைமையிலான இந்திய அணி இன்று தீர்த்து வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்திய அணியில் ரோகித், பன்ட், சூரியகுமார், ஹர்திக், அக்சர் பேட்டிங்கில் கை கொடுத்து வருகின்றனர். கடந்த போட்டிகளில் கணிசமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறிய கோஹ்லி, துபே, ஜடேஜாவும் பொறுப்புடன் விளையாடி பங்களித்தால் தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கலாம். வழக்கம் போல பும்ரா, அர்ஷ்தீப், ஹர்திக், குல்தீப், அக்சர் பந்துவீச்சு கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.

அதே சமயம், முதல் முறையாக உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியுள்ள மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதுடன் யான்சென், ரபாடா, அன்ரிச், ஷம்சி, மகராஜ் ஆகியோரது துல்லிய பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இந்தியா 2வது முறையாகவும், தென் ஆப்ரிக்கா முதல் முறையாகவும் கோப்பையை கைப்பற்ற வரிந்துகட்டுவதால், பைனலில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3வது முறையாக பைனலில்…
* டி20 உலக கோப்பையில் 6 ஆட்டங்களில் மோதியதிலும் இந்தியா 4-2 என முன்னிலையில் உள்ளது.
* ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை பைனலில் இந்தியா 3வது முறையாக விளையாட உள்ளது. 2007ல் கோப்பையை வென்ற இந்தியா, 2014ல் பைனலில் தோற்று 2வது இடம் பிடித்தது. 2016, 2022ல் அரையிறுதியுடன் வெளியேறியது.
* உலக கோப்பை தொடரின் பைனலில் தென் ஆப்ரிக்கா முதல் முறையாகக் களமிறங்குகிறது.
* இந்தியா – தென் ஆப்ரிக்கா இதுவரை 26 முறை டி20ல் மோதியுள்ளதில் இந்தியா 14-11 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் மழையால் ரத்து).

* மோதிய 5 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா 3-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (ஒரு ஆட்டம் ரத்து).
* அதிகபட்சமாக இந்தியா 237, தென் ஆப்ரிக்கா 227 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக தென் ஆப்ரிக்கா 106, இந்தியா 28 ரன்னில் சுருண்டுள்ளன.
* முதலில் பேட் செய்த 13 ஆட்டங்களில் இந்தியா 10ல் வென்றுள்ளது. அதே சமயம் இலக்கை துரத்திய 12 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா 8ல் வென்று சாதித்துள்ளது.
* நடப்பு தொடரில் இரு அணிகளும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் பைனலுக்கு முன்னேறி உள்ளது, உலக கோப்பை வரலாற்றில் இதுவே முதல் முறை.

சாபம்… சோகம்…
* நடப்பு சாம்பியன் மீண்டும் கோப்பையை வென்றதில்லை, அரையிறுதியை தாண்டியதில்லை என்ற சோக வரலாறு இந்த உலக கோப்பையிலும் தொடர்கிறது
* போட்டியை நடத்தும் நாடுகள் டி20 உலக கோப்பையை வென்றதில்லை என்ற பட்டியலில் அமெரிக்காவும், மீண்டும் வெஸ்ட் இண்டீசும் இணைந்துள்ளன.
* இந்த முறை கோப்பையை வென்றால் 2முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து பட்டியலில் இந்தியாவும் இணையும்.

* உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா இந்த பைனலில் வென்றாலும் அது வரலாறு தான். கூடவே இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என ஒரு முறை கோப்பையை வென்ற நாடுகளின் வரிசையில் தென் ஆப்ரிக்காவும் இணையும்.
* முதல் உலக கோப்பையில் இருந்து இதுவரை 9 உலக கோப்பைகளிலும் விளையாடி உள்ள நாடுகள் மட்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன. அந்த வாய்ப்பை பெறாத ஒரே அணி வங்கதேசம்.

The post ஐசிசி டி20 உலக கோப்பை பைனல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: