சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.10.20 கோடி அறிவிப்பால் புதுப்பொலிவு பெறப்போகும் புல்லாவெளி அருவி

பட்டிவீரன்பட்டி: புல்லாவெளி அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் ரூ.10.20 கோடியில் மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிலிர்க்க வைக்கும் புல்லாவெளி அருவி இனி புதுப்பொலிவு பெறும் என சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அருகே, பெரும்பாறை புல்லாவெளி அருவி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு, இவைகளைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் புல்லாவெளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். பசுமையான மலைகளுக்கு மத்தியில் பள்ளத்தாக்கில் அருவி அமைந்துள்ளது. எப்போதும் ஜில்லென்ற தட்பவெப்பநிலை நிலவும். இதனால், இப்பகுதியில் இயற்கை அழகை ரசிப்பதற்கும், அருவியில் குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

ஆங்கிலேயர் கால தொங்குபாலம்

இந்த அருவிக்கு தண்ணீர் வரும் ஆற்றின் குறுக்கே விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், ஆற்றை கடப்பதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில், இருகரைகளையும் இணைக்கும் வகையில், சுமார் 100 அடி உயரத்தில் இருபுறமும் இரும்பு ரோப்புகளுடன் கூடிய தொங்குபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக செல்லும் சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே செல்பி எடுத்து மகிழ்வர். இதில் நடந்து செல்வதே வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததும், சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை சார்பிலான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி மற்றும் கோட்டை நங்காஞ்சியாறு அணைப் பகுதி, மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி அருவி மற்றும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை அருவி ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், புல்லாவெளி அருவியும் புதுப்பொலிவு பெறும் என சுற்றுலாப் பயணிகளும், மலைவாழ் மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

The post சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.10.20 கோடி அறிவிப்பால் புதுப்பொலிவு பெறப்போகும் புல்லாவெளி அருவி appeared first on Dinakaran.

Related Stories: