ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஒன்றிய அமைச்சரிடம் எம்பிக்கள் மனு

திருமலை: விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாரிடம் வழங்கக்கூடாது என்று ஒன்றிய அமைச்சர் குமாரசாமியிடம் பாஜக எம்பிக்கள் நேற்று மனு அளித்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உருக்காலை தொழிற்சாலை இயங்கிவந்தது. ஆனால் இந்த ஆலை நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இதனை தனியாரிடம் ஒப்படைக்க கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்ைக மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த ஆலையை லாப நோக்கத்தோடு மீண்டும் இயக்க ஆந்திர மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து அவ்வப்போது எம்பிக்களை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் ஆந்திர மாநில பாஜக எம்.பி.புரந்தேஸ்வரி தலைமையில் அக்கட்சி எம்பிக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் உருக்காலையை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக நேற்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், `விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைப்பதை ஆந்திர மக்கள் விரும்பவில்லை, எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உருக்காலையை மத்திய அரசு மீண்டும் திறம்பட நிர்வகித்து லாப பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் குமாரசாமி, அடுத்த 2 மாதங்களில் இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய உருக்கு மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் பூபதிராஜு சீனிவாசவர்மா மற்றும் ஆந்திர எம்பிக்கள் உடனிருந்தனர்.

The post ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஒன்றிய அமைச்சரிடம் எம்பிக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: