கூட்டம் தொடங்கிய நாளில் இருந்தே ரகளை அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்: பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு

தமிழக சட்டப்பேரவை நேற்று காலை தொடங்குவதற்கு முன் வழக்கம் போல கருப்பு சட்டை அணிந்து அதிமுக உறுப்பினர்கள் வந்தனர். கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். அப்போது சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் அனைவரும் இருக்கைக்கு செல்லுங்கள் என்றார். அப்போதும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர், தொடர்ந்து அவையை நடத்த விடமாமல் அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கிறீர்கள். எனவே அவைக் காலவர்கள் அவைக்குள் வந்து, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிடுகிறேன் என்றார்.

(இதையடுத்து அவைக் காவலர்கள் அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்). தொடர்ந்து சபாநாயகர் பேசும்போது, பேரவை விதி 56ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரும்போது, அதை விவாதத்துக்கு எடுப்பதா, வேண்டாமா என்பது குறித்து அவைத் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு, என் பதிலை கேட்காமல் கூச்சல் போடுகிறீர்கள். ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பேச எதிர்க்கட்சித் உறுப்பினர்கள் தயாராக இல்லை. பேரவை விதி 65(4) பொதுத் தீர்மானமோ, ஒத்திவைப்பு தீர்மானமோ கொண்டு வந்து அவர்கள் பேசியதும், அதற்கு முதல்வரோ, அமைச்சரோ பதில் சொல்லிவிட்டால் அதை விவாதத்துக்கு எடுக்க முடியாது. எங்களை பேச அழைக்கவில்லை என்று வெளியே சென்று பேட்டி தர வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம். தொடர்ந்து அவர்கள் இப்படி நடந்து கொண்டதால் வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் துரைமுருகன்: நாட்டில் நடக்கும் ஒரு பிரச்னையை சட்டமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. அவர்கள் எதற்காக கருப்பு சட்டை அணிந்து வந்தனர் என்ற காரணத்துக்காவது அவர்கள் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெளியில் போய் பேட்டி கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். ஏதோ அவர்கள் உத்தமமான ஆட்சி நடத்தினர் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் உள்ளே வந்து பேசினால் அவர்களின் ஆட்சி குறித்து நமது முதல்வர், கிழி, கிழி என்று கிழித்திருப்பார். கள்ளச்சாராயம் என்பது தேவையில்லாத ஒன்றுதான், நடக்க கூடாத ஒன்று நடந்துவிட்டது. அதற்கு பரிகாரம் தேவை. அதை முதல்வர் செய்துவிட்டார். ஆனால், அது குறித்த முதல்வரின் பேச்சுக்கு பதில் கூற முடியாமல் வெளியில் செல்கின்றனர்.

சபாநாயகர்: பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியும் பேரவை அலுவல்கள் நடக்க விடாமல் இடைமறித்தும், பேரவை சட்ட விதிகளை மீறியும், அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டுள்ளதால், பேரவை 121(2)ன் கீழ் அவர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து உத்தரவிடுகிறேன். கூட்டத் தொடர் முடியும் வரையில் எஞ்சிய நாட்களுக்கு அவர்கள் பேரவைப் பணிகளில் கலந்து கொள்ளக் கூடாது.

இதைத் தொடர்ந்து முதல்வர் பேசியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது என்று சட்டமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் மக்கள் பிரச்னையைப் பற்றி இந்த பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாக தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல் எதிர்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது பேரவையின் மாண்புக்கும் மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால் நாம் இந்த துயரச் சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு இருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. இவ்வாறு முதல்வர் பேசினார்.

The post கூட்டம் தொடங்கிய நாளில் இருந்தே ரகளை அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்: பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: