நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 2000 பேர்.. 670 பேர் சடலங்களாக மீட்பு : பப்புவா நியூ கினியாவில் சோகம்

போர்ட் மோர்ஸ்பி : பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியாவில் கடந்த வாரம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அதில் சிக்கினர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. நிலச்சரிவில் 100 பேர் பலியானதாக அந்த நாட்டின் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.

நேற்று மண்ணில் புதைந்த நிலையில் 5 உடல்கள் மற்றும் இறந்த ஒருவரின் ஒரு காலும் மீட்கப்பட்டன. இந்த நிலையில், எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் புதையுண்டன. மீட்புப் பணிகள் தீவிரம் அடைந்த நிலையில், 2 ஆயிரத்துக்கும் அதிகமனோர் உயிருடன் புதைந்ததாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பேரழிவு ஏற்பட்ட எங்கா மாகாணத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனிடையே, ஐநா அமைப்புடன் தொடர்புடைய இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹன் அக்டோபரக் நேற்று கூறுகையில்,‘670 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேடான பகுதியில் இருந்து மண் தொடர்ந்து சரிந்து வருகிறது. இடிபாடுகள் மற்றும் மண் சரிவு ஏற்படும் பகுதியில் மீட்பு பணிகளை தொடர்வது சிரமமாக உள்ளது’’ என்றார். சில இடங்களில் மீட்பு பணிகளுக்கான கருவிகள் இன்னும் வரவில்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன. மேலும் சர்வதேச உதவியை கேட்பது தொடர்பாக பப்புவா நியூ கினியா அரசு நாளை முடிவெடுக்கும் என தெரிகிறது.

The post நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 2000 பேர்.. 670 பேர் சடலங்களாக மீட்பு : பப்புவா நியூ கினியாவில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: