10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் நகல் பெற மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு எழுதியவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.95 % அதிகம் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது.

முன்னதாக பிப்ரவரி மாதம் 23ம் தேதிமுதல் 29ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ மாணவியர் எழுதினர். பொதுத் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவியரில், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 பேர் மாணவியர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிகள் இன்று காலை வெளியானதும், மாணவர்களின் செல்போன் எண்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொது நூலகங்கள் ஆகியவற்றில் இருந்தும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்தந்த பள்ளிகளின் மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்களை கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 15.05.2024 முதல் 20.05.2024 வரை தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக விண்ணப்பித்து ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்தாள் நகலைக் கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 13 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் மதிப்பெண் சான்றிதழ் நகல் பெற மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

The post 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் appeared first on Dinakaran.

Related Stories: