பட்டிவீரன்பட்டி அருகே புதர்மண்டி கிடக்கும் மருதாநதி ஆற்றை உடனே தூர்வார விவசாயிகள் கோரிக்கை

பட்டிவீரன்பட்டி : புதர்மண்டி கிடக்கும் மருதாநதி ஆற்றை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பட்டிவீரன்பட்டி அருகே உள்ளது அய்யம்பாளையம் மருதாநதி அணை. 72 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு பண்ணைக்காடு, கடுகதடி, பூலத்தூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து மழைக்காலங்களில் நீர்வரத்து இருக்கும். இந்த அணையின் பிரதான வாய்க்காலில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தாலுகாவைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மருதாநதி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அய்யம்பாளையம் பெரியபாலம் அருகில் இரண்டாக பிரிக்கப்பட்டு நெல்லூர், ரெங்கராஜபுரம் காலனி ஆகிய கிராமங்களில் உள்ள குளங்களுக்கும், பட்டிவீரன்பட்டி, அய்யன்கோட்டை, எம்.வாடிப்பட்டி வழியாக நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள குளங்களுக்கும் செல்கிறது.

அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் இருந்து தண்ணீர் சென்றடையும் கடைமடை வரை ஆக்கிரமிப்பு உள்ளது. ஆக்கிரமிப்பால் மருதாநதி ஆறு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. ஆக்கிரமிப்பு ஒருபுறம் இருக்க, மறுபக்கம் ஆறு முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகின்றன. இதனால் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக கடை மடை வரை விவசாய நிலங்களை சென்றடைவதில்லை. மேலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க

விவசாயிகள் கூறுகையில், ‘இந்த அணை தண்ணீர் மூலம் 2 தாலுகாக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீர் தான் 2 தாலுகா விவசாய நிலங்களுக்கு நீராதாராமாகும். மேலும் சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் போன்ற பேரூராட்சிகளுக்கும், சித்தரேவு, தேவரப்பன்பட்டி உட்பட 5க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் முட்புதர்களை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post பட்டிவீரன்பட்டி அருகே புதர்மண்டி கிடக்கும் மருதாநதி ஆற்றை உடனே தூர்வார விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: