காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி

*தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு அபாயம்

புதுச்சேரி : புதுச்சேரி காராமணிக்குப்பத்தில் காட்சிப் பொருளாக நிறுத்தப்பட்டுள்ள தற்காலிக நடமாடும் கழிப்பிட வண்டியை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அதையொட்டி தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு அபாயம் உள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு புவன்கரே வீதி- அய்யனார்கோவில் வீதி சந்திப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. நடுரோட்டில் வாய்க்கால் இணைப்புக்கு பெரியளவில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே நெல்லித்தோப்பு காராமணிக்குப்பம் ரோடு சந்திப்பில் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கிய மீன் மார்க்கெட் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டன. புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில், தற்காலிகமாக இந்த மீன் மார்க்கெட் காராமணிக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நெல்லித்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தினமும் அங்கு வந்து செல்கின்றனர்.

ஏற்கனவே இதற்காக அமைக்கப்பட்டிருந்த ஷெட்டில் மீன் மார்க்கெட் இயங்கி வரும் நிலையில், அங்குள்ள மீன் வியாபாரிகளின் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் நகராட்சியால் செய்து கொடுக்கப்பட்டன. இதனிடையே மீன் வியாபாரிக்காகவும், பொதுமக்களின் அவசர தேவைக்காகவும் அங்கு தற்காலிக நடமாடும் கழிப்பிட வண்டி நிறுத்தப்பட்டது. தற்போது அவை முழுமையான பயன்பாடின்றி திறந்த வெளியில் காட்சிப் பொருளாக நிற்கிறது. இதை பயன்படுத்தாமல் பெரும்பாலானோர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் ஏற்கனவே இந்த கழிப்பிட வண்டியை ஒட்டிய பகுதியில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கும் நிலையில் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் மீன்களை வாங்குவதற்காக அப்பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அங்கு தேங்கியுள்ள கழிவுநீரை உடனே அகற்றுவதோடு, காட்சி பொருளாக நிற்கும் தற்காலிக நடமாடும் கழிப்பிட வண்டியையும் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு தேவையான வசதிகளை, பராமரிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் மீனவ சமூக அமைப்புகள் அரசை வலியுறுத்தி உள்ளன.

The post காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி appeared first on Dinakaran.

Related Stories: