தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க முயற்சி:நடவடிக்கை கோரி போலீசில் புகார்

கூடலூர் : கூடலூர் நகரை ஒட்டியுள்ள சில்வர் கிளவுட் தனியார் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமாக மைசூர் சாலையில் உள்ள காய்ந்த மூங்கில் காடுகளை அழித்து தனிநபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கூடலூர் – மைசூர் சாலை மாக்குமூலா பகுதியில் சாலையில் இருபுறமும் அடர்ந்த மூங்கில் காடுகள் இருந்தன.இங்குள்ள தனியார் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இந்த மூங்கில் காடுகள் கடந்த சில வருடங்களுக்கு முன் வயது முதிர்ந்து பூத்ததால் காய்ந்து விட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன் காய்ந்த மூங்கில் காடுகள் அடிக்கடி தீப்பற்றி எரிந்தன. காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என்பதால் தீயணைப்புத் துறையினரும் அவ்வப்போது சென்று தீயை அணைத்து வந்தனர். ஆனால் வெளி நபர்கள் சிலர் இந்த மூங்கில் காடுகளை தீ வைத்து எரித்து மரங்களை வெட்டி காடுகளை சுத்தப்படுத்தி ஆக்கிரமிப்பு செய் முயல்வது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து தோட்ட நிர்வாகத்தின் கள அலுவலர் ராஜேந்திரன் கூடலூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கூடலூர் கிராமம் மைசூர் சாலையை ஒட்டிய மாக்குமூலா சங்கிலி கேட் பகுதியில் உள்ள நிலம் சில்வர் கிளவுட் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமானது. தற்போது காய்ந்த மூங்கில்களை தீ வைத்து எரித்து, அடிக்காடு மற்றும் சிறு மரங்களை வெட்டி அப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.இதுபோல் சுமார் 100 ஏக்கர் வரை உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.சில்வர் கிளவுட் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்குவதற்கு மாவட்ட நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் அடுத்த விசாரணை வரும் ஜூன் 13ல் நடைபெற உள்ளது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் இதில் நீதிமன்ற நிபந்தனை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.எனவே நீதிமன்ற நிபந்தனையை மீறி மேற்கண்ட பூமியில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஒரு இடத்தில் மூங்கில் காடுகள் அழிந்தால் அப்பகுதியில் மீண்டும் மூங்கில் காடுகள் வளர பல வருடங்கள் பிடிக்கும். காய்ந்த மூங்கில்கள் அடியோடு மக்கி மண்ணான பின் அங்கிருந்து புதிய மூங்கில் துளிர்கள் முளைத்து காடுகள் உருவாகும்.

இதேபோல் இப்பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்ட மூங்கில் காடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன் மீது மழையில் சில இடங்களில் மூங்கில் செடிகள் துளிர் விட்டு வருகின்றன.இதுகுறித்து வருவாய்த்துறை, வனத்துறை,காவல்துறைக்கு ஏற்கனவே புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க முயற்சி:நடவடிக்கை கோரி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: