திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ₹86.25 கோடி செலவில் எல்லிஸ் சத்திரம் அணைகட்டை முதன்மை செயலாளர் ஆய்வு

*36 கிராமங்களில் குடிநீர் ஆதாரம் மேம்படும்

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.86.25 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமான பணியை முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கிடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949-1950ம் ஆண்டு எல்லிஸ் சத்திரம் அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் உள்ள வலது புற பிரதான கால்வாயான எரளுர், ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடது புற பிரதான கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று கால்வாய்கள் மூலம் 14 ஏரிகளுக்கு மொத்தம் 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அணைக்கட்டு சேதம் அடைந்தது. இதனால் இந்த அணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது. இதையடுத்து சேதமடைந்த அணைக்கட்டை சீரமைக்க 2023-2024ம் ஆண்டு ரூ.86.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை மாநில முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா மற்றும் விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா கூறுகையில், ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் எல்லிஸ் சத்திரம் அணைக் கட்டை மறுக்கட்டுமானம் செய்வதால் 26 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று 13,100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி உறுதி செய்யப்படுவதால் அணைக்கட்டை சுற்றியுள்ள 36 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு விவசாய மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும்.

தற்போது வரை நடைபெற்றுள்ள பணியின் விவரம் மற்றும் கட்டுமான பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட உடன் தற்போது வரை 70% கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது, என்றார். ஆய்வின் போது விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, நகராட்சி ஆணையர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், உதவி பொறியாளர் மனோஜ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ₹86.25 கோடி செலவில் எல்லிஸ் சத்திரம் அணைகட்டை முதன்மை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: