தேன்கனிக்கோட்டை அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்றிய மருத்துவ குழுவினர்

*மலை கிராம மக்கள் பாராட்டு

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, மலை கிராமத்தில் இரவு நேரத்தில் பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணுக்கு, விரைந்து சென்று சிகிச்சையளித்து உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குள்ளட்டி கவுண்டனூர். மலை கிராமமான இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த கெண்டன் மனைவி ருத்ரி(20) என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

வரும் 23ம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, திடீரென வயிற்று வலியால் ருத்ரி துடித்தார். இதனால், அவரது கணவர் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது தவித்தனர். தகவல் அறிந்து கெலமங்கலம் வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் குள்ளட்டி கவுண்டனூர் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். குள்ளட்டி கவுண்டனூர் செல்லும் சாலை மிகவும் ஆபத்தான கரடு முரடான சாலையாகும். அது மட்டுமன்றி அப்பகுதியில் காட்டு யானைகள், காட்டெருதுகள் சுற்றித் திரிவது வாடிக்கை.

அதனையும் பொருட்படுத்தாமல் இரவு நேரத்தில் மருத்துவ குழுவினர் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று ருத்ரிக்கு சிகிச்சை அளித்தனர். இதில், அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சுமார் 2 கிலோ எடையில் இருந்தது. குழந்தை நலமுடன் இருந்த நிலையில், தாய்க்கு ரத்த அழுத்தம் இருந்ததால், உடனடியாக இருவரையும் மருத்துவர்கள் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தாயும் -சேயும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரவு நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சென்ற மருத்துவ குழுவினரை பழங்குடியின மக்கள் பாராட்டி வருகின்றனர்.

The post தேன்கனிக்கோட்டை அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்றிய மருத்துவ குழுவினர் appeared first on Dinakaran.

Related Stories: