மனிதனுடைய வலிமையை அழிக்கக் கூடிய விஷயங்கள் எது?

– சிவசுப்ரமணியன், கோவை.

மனிதனுடைய வலிமையை அழிப்பது மூன்று விடயங்கள்தான். ஒன்று அச்சம். இரண்டாவது கவலை. மூன்றாவது நோய். நோய் என்பதில் உடல் நோயைவிட மனநோய் மிக முக்கியமானது. அனேகமாக பலரும் இந்த மனநோயோடுதான் இருக்கின்றார்கள். சதவீதம்தான் கொஞ்சம் வேறுபடுகிறது.

வன்னி மரம் வீட்டில் வளர்க்கலாமா?

– பாலாஜி, ஸ்ரீ ரங்கம்

பொதுவாகவே சில மரங்களை வீட்டில் வளர்க்கச் சொல்வார்கள். சில மரங்களை வளர்க்க வேண்டாம் என்பார்கள். வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்: 1. அகத்தி மரம் 2. நாவல் மரம் 3. அத்தி மரம் 4. புளிய மரம் 5. கருவேல மரம் 6. வில்வ மரம் 7. அரச மரம் என இப்படி பல மரங்கள் உண்டு. வளர்க்க கூடாத மரங்களில் வன்னி மரமும் ஒன்று. வன்னி மரம் பெரும்பாலும் கோயில் நந்தவனங்களில் வளர்ப்பதுதான் சிறந்தது. ஆனால், வன்னி மரம் என்பது தெய்வீகமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த வன்னி மரத்தின் மரக்கட்டைகளை கடைந்துதான் ஹோமங்களுக்கு அக்னியை ஏற்படுத்துகின்றார்கள்.

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது?

– சுசிகணபதி, வல்லக்கோட்டை.

ஒரு காரியத்திற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். காரியம் வெற்றி அடையவில்லை. இப்பொழுது ஒரு பேப்பரில் பின்வரும் கேள்விகளுக்கான பதிலை எழுதிப் பாருங்கள். தோல்விக்கு நான் காரணமா, என்னுடைய ஏற்பாடுகள் காரணாமா என்று கேட்டு, விடை எழுதுங்கள். எல்லாம் சரியாக இருந்து, காரியம் ஜெயமாகவில்லை என்றால் விதி
விளையாடுகிறது என்றுதானே பொருள்.

எல்லோரையும் நம்மால் சந்தோஷப்படுத்த முடியுமா?

– விஜி, ஏற்காடு.

நம்மால் மட்டுமல்ல, சாட்சாத் அந்த பகவானாலேயே முடியாத காரியம். கண்ணனால் துரியோதனையை சந்தோஷப்படுத்த முடிந்ததா? ராமனால் ராவணனை சந்தோஷப்படுத்த முடிந்ததா? எனவே உலகில் எல்லோரையும் அல்ல, ஒரு சிலரைக் கூட சந்தோஷப்படுத்துவது என்பது சிரமமான விஷயம். ஆனால், ஒன்று. இயன்றளவு எல்லோருடனும் சண்டை போட்டுக் கொள்ளாது சந்தோஷமாக இருக்க முயற்சிக்கலாம். இது கொஞ்சம் சுலபமான விஷயம்.

ஞானம் பெறுவதற்கு சாஸ்திரங்கள் தேவையா?

– கண்ணன் பிரசாத், திண்டிவனம்.

ஒரு விஷயம் பயன்படுமா பயன்படாதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கும், அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு அவசியம். சாத்திரங்களை மட்டும் படித்தறிவதால் ஞானம் பெற முடியாது என்பது உண்மைதான். ஆயினும், ஞானம் பெறும் வழியை உணர்த்துவதில் சாஸ்திரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, ஞானத்தைத் தேடுபவர்களுக்கு சாஸ்திரங்களும் அவசியம்.

பாரதத்தில் பெண்களை மக்கள் வணங்குவது ஏன்?

– கிருஷ்ணகுமார், தேனி.

கோயிலுக்குப் போய்த் தெய்வத்தை வணங்குகிறோம். கர்பக்கிரகத்தில் அதாவது, கருவறையில் இருப்பது ஆண் தெய்வமோ; பெண் தெய்வமோ? எல்லோரும் வணங்குகிறோம். அது போல, தன் கர்ப்பத்தில் அதாவது கருவில், ஆணோ – பெண்ணோ, ஏதாவது ஒன்றைத் தாங்கக் கூடியவள் பெண். அனைவரும் வணங்கும் தெய்வம் இருக்குமிடம் – கருவறை. அப்படிப்பட்ட உயர்ந்ததான அந்தக் கருவறை இருப்பது பெண்களிடம்தான்; ஆண்களிடம் இல்லை. இதன் காரணமாகவே பாரத தேசத்தில் பெண்களைத் தெய்வமாக வணங்குகிறோம்.

நாமாவளி – பாராயணம் இவற்றின் பொருள் மற்றும் வேறுபாடு குறித்து விளக்கம் வேண்டுகிறேன்.

– பரசுராம், வந்தவாசி.

ஆவளி என்பதற்கு வரிசை என்று பொருள். தெய்வத் திருநாமங்களை ஒருவரோ அல்லது பலரோ, வரிசையுடன் பக்க வாத்தியங்களுடன் இசையுடன் சொல்வது – நாமாவளி. பாராயணம் – ஏதாவது ஒரு நூலை முழுமையாகவோ அல்லது பகுதி பகுதியாகவோ, ஏதேனும் ஒரு வேண்டுகோள் நிறைவேறுவதற்காக பிரார்த்தனை பலிப்பதற்காகப் படிப்பது ‘பாராயணம்’.

 

The post மனிதனுடைய வலிமையை அழிக்கக் கூடிய விஷயங்கள் எது? appeared first on Dinakaran.

Related Stories: