1 லட்சம் மலர்களால் ஆன ‘டிஸ்னி வேர்ல்டு’, 33 அடி நீளத்தில் மலை ரயில் .. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது…!!

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை தொடங்கியது. கொய் மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில் மலர் அலங்காரம் உருவாக்கப்பட்டுள்ளது.கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா மற்றும் மலர் கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி மற்றும் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ஆகியன நடத்தப்படுகிறது. இதில், மலர் கண்காட்சியே முக்கிய விழாவாக கருதப்படுகிறது. ஊட்டி மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா துவக்கி வைத்து பார்வையிட்டார். வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா, சர்க்கரை துறை ஆணையர் விஜயராஜ்குமார், வேளாண் விற்பனை ஆணையர் பிரகாஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், மாவட்ட கலெக்டர் அருணா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இன்று 10ம் தேதி துவங்கி 10 நாட்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியையொட்டி பூங்கா பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா முழுவதிலும் பல லட்சம் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 20 அடி உயரத்தில் டிஸ்னி வோர்ல்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல ஆயிரம் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில், காளான், ஆக்டோபஸ் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு உருவாக்கப்படவுள்ளது. 126வது பிளவர் ஷோ போன்ற மலர் அலங்காரம் பல ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

இது தவிர மலர்களை கொண்டு பல்வேறு ரங்கோலி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மலர் அலங்காரங்கள், மலர் கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. 10 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இது தவிர, 15 தனியார் மற்றும் அரசுத்துறை போட்டியாளர் அரங்கும் அமைக்கப்படும்.

இன்று துவங்கிய ரோஜா கண்காட்சியில், பல ஆயிரம் மலர்களை கொண்டு புறா, வன விலங்குகளை காக்க வேண்டும் என வலியுறுத்தி யானைகள், புலி, வரையாடு, காட்டுமாடு மற்றும் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூங்காக்களை அமைத்து போட்டிக்காக பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு சிறந்த பூங்காவிற்கான சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது. மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை காண நேற்று முதலே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர்.

The post 1 லட்சம் மலர்களால் ஆன ‘டிஸ்னி வேர்ல்டு’, 33 அடி நீளத்தில் மலை ரயில் .. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது…!! appeared first on Dinakaran.

Related Stories: