சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி நாய் வளர்ப்போருக்கு கட்டுப்பாடுகள்: சங்கிலி, முககவசம் அணிவித்து வெளியே அழைத்துச்செல்ல வேண்டும்; 23 வகை நாய்களுக்கு உடனடி கருத்தடை; தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

சென்னை: சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலியாக, நாய் வளர்ப்போருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாய்களுக்கு சங்கிலி, முகக் கவசம் அணிவித்து வெளியே அழைத்து செல்ல வேண்டும். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ராட்வீலர், பிட்புல் டெரியர் உள்ளிட்ட 23 வகை நாய்களுக்கு உடனடி கருத்தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பூங்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ராட்வீலர் வகையை சேர்ந்த இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.

இச்சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாய்கள் கடித்ததில் அந்த சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்கள் சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து கடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நாய்கள் மீது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மீண்டும் இதுபோல நடக்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை உறுப்பினர் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 6ம் தேதி சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இனத்தை சேர்ந்த 2 வளர்ப்பு நாய்கள் கடித்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. மார்ச் 12ம் தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும், மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியான இந்த வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக இணைப்பு சங்கிலி மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவு நாயின் மூக்கு நுனியில் இருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை, தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தடை செய்யப்பட்ட 23 வகை நாய்கள்
பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சவுத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக்.

The post சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி நாய் வளர்ப்போருக்கு கட்டுப்பாடுகள்: சங்கிலி, முககவசம் அணிவித்து வெளியே அழைத்துச்செல்ல வேண்டும்; 23 வகை நாய்களுக்கு உடனடி கருத்தடை; தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: