வானில் ஓர் உரையாடல்

இறைவனை தியானிக்கும் நல்லோர் குழுவும் அவர்களுடன் இணைந்து இருப்பதும் பெரும் நன்மைகளை ஈட்டித் தரும். நபிமொழித் தொகுப்பில் காணப்படும் பின்வரும் நிகழ்வு இறைவனை நினைவுகூர்வது எத்துணைச் சிறப்பானது என்பதை எடுத்துக்காட்டுகிறது.இறைவனிடம் சில வானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சிறப்பு அந்தஸ்து பெற்றவர்கள். உலகில் இறைவனை தியானிக்கும் கூட்டத்தினரைக் கண்டால் இந்த வானவர்கள் அவர்களை வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள். அப்போது இறைவனுக்கும் வானவர்களுக்கும் நடக்கும் உரையாடல் வருமாறு:

இறைவன்: என் அடியார்களை என்ன செய்து கொண்டிருக்கும் நிலையில் விட்டு வந்தீர்கள்?
வானவர்: உன்னைப் புகழ்ந்து கொண்டும் உன்னைத் துதித்துக் கொண்டும் உன்னை நினைவு கூர்ந்து கொண்டும் இருந்தார்கள்.
இறைவன்: அவர்கள் என்னைப் பார்த்துள்ளார்களா?
வானவர்: இல்லை.
இறைவன்: அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எப்படி இருப்பார்கள்?
வானவர்: அந்த மக்கள் உன்னைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னைப் புகழ்ந்து, பெருமைப்படுத்தியிருப்பார்கள். நினைவுகூர்ந்து போற்றியிருப்பார்கள்.
இறைவன்: அந்த மக்கள் என்ன வேண்டுகிறார்கள்?
வானவர்: அவர்கள் சொர்க்கம் வேண்டுகிறார்கள்.
இறைவன்: அவர்கள் சொர்க்கத்தைப் பார்த்திருக்கிறார்களா?
வானவர்: இல்லை.
இறைவன்: அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்?
வானவர்: அந்த மக்கள் அதைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகம் அதன் மீது பேரார்வம் கொண்டு அதிக வேட்கையுடன் வேண்டுவார்கள்.
இறைவன்: அந்த மக்கள் எதிலிருந்து பாதுகாவல் தேடுகிறார்கள்?
வானவர்: நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறார்கள்.
இறைவன்: நரகத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?
வானவர்: இல்லை.
இறைவன்: பார்த்திருந்தால் அவர்களின் நிலைமை எப்படி இருக்கும்?
வானவர்: அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அதிலிருந்து இன்னும் கடுமையாக விரண்டோடியிருப்பார்கள். அதை அதிகம் அஞ்சுபவர்களாகவும் அதிலிருந்து அதிகம் பாதுகாப்புத் தேடுபவர்களாகவும் இருந்திருப்பார்கள்.
இறைவன்: நான் அவர்களை மன்னித்துவிட்டேன். அதற்கு நான் உங்களை சாட்சி ஆக்குகிறேன்.
வானவர்: அந்தக் கூட்டத்தில் ஒரு குற்றவாளி இருக்கிறார். அவர் இறை தியானம் செய்ய வரவில்லை. வேறு ஏதோ தேவைக்காக வந்திருப்பவர்.
இறைவன்: அந்த நற்பேறு பெற்ற மக்களுடன் சேர்ந்து அமர்ந்த ஒருவர் நற்பேறு பெறுவாரே தவிர, துர்பாக்கியசாலி ஆகமாட்டார். (ஆதாரம்: திர்மிதீ)நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனை நினைவு கூர்வோம். நல்லோர்கள் குழுவுடன் இணைந்திருப்போம்.
– சிராஜுல் ஹஸன்

The post வானில் ஓர் உரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: