அள்ளித் தரும் அட்சய திருதியை

“ஷயம்’’ என்றால் குறைவு. “அட்ஷயம்’’ என்றால் குறைவில்லாது. இந்த நாள்தான் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர – புராணம்’ விவரிக்கிறது. அட்சய திருதியை என்று சொன்னால் குறைவில்லாதபடி எதைச் செய்தாலும் நிறைவு தருகின்ற வகையில் ஒன்று நூறு ஆயிரமாகப் பல்கிப் பெருகுகின்றன நன்னாள் என்று பொருள். வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியைத் தினத்தைச் சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள். ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியைத் தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

புண்ணிய பலம் இருக்க வேண்டும்

அட்சய திருதியை அன்று எது செய்தாலும் அது பன்மடங்காக வளரும். ஆனால், அந்த நாளை நாம் தவறாக புரிந்து கொள்கின்றோம். நாம் அன்றைய தினம் நகை பொருள்கள் முதலியவற்றை வாங்கினால் அது தொடர்ந்து வளரும் என்று நினைக்கிறோம். இதைப் போன்ற சில பொருள்கள் ஒருவனுக்கு பிராரப்தத்தினால் கிடைக்கக் கூடியது.அதைப் பெற வேண்டுமென்று சொன்னால், புண்ணிய பலம் இருக்க வேண்டும். அட்சய திருதியை அன்று புண்ணியம் வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால், அந்த புண்ணியத்தின் கிடைக்கும். எனவேதான் அட்சய திருதியை அன்று தான தர்மத்தை அதிகம் செய்யச் சொன்னார்கள். புண்ணியம் வளரவேண்டும் என்று சொன்னால் தானத்தின் மூலமும் தர்மத்தின் மூலமும் மட்டும் தான் வளரும். அந்த தர்மத்தின் மூலமாக நமக்கு பலவிதமான நன்மைகளும் ஆடை ஆபரணங்கள் செல்வம் தங்கம் வெள்ளி முதலிய உலோகங்கள் சேரும். அமாவாசைக்கு 3-வது நாள் திருதியை. 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குருவுக்கு உரிய உலோகத்தில் ஒன்று மஞ்சள் நிறமுடைய தங்கம். இதனால்தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவதும் ஸ்வர்ண தானம் செய்வதும் சிறப்பு பெறுகிறது.

எதை வாங்க வேண்டும்? எதைத் தர வேண்டும்?

எனவே அட்சய திருதியை செய்ய வேண்டியது
1. தானம் செய்ய வேண்டும்.
2. தவம் (வழிபாடு) செய்ய வேண்டும்.
3. அட்சய திருதியை அன்று அதிகாலையான பிரம்ம முகூர்த்தத்தில் நாம் பூஜை செய்தாலே அதிக பலன் கிடைக்கும்.
4. வீட்டு வாசலில் கோலம் போட்டு விளக்குகளை வைத்து மாவிலைத் தோரணம் கட்டி, வழிபாடுகள் செய்ய வேண்டும்.
5. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
6. பசு மாடு போன்ற விலங்குகளுக்கு ஏதேனும் உணவு கொடுக்க வேண்டும்.
7. பறவைகளுக்கு நீர் வைக்க வேண்டும் தானியங்கள் போட வேண்டும்.
8. பசி என்று வந்தவருக்கு ஒரு வாய் சோறு போட வேண்டும்.
9. உடைகள் இல்லாதவர்களுக்கு அன்று புத்தாடைகள் வாங்கி தானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

இவைகள் எல்லாம் நாம் கொடுப்பதன் மூலமாக வளரும்.
அதுபோலவே, நாம் வாங்குவதன் மூலமாக சில விஷயங்கள் வளரும்
அப்படி வாங்க வேண்டியது என்ன என்று சொன்னால்
1. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
2. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
3. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.அட்ஷய திருதியை ஆலய விசேஷங்கள்
1. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் பரசுநாதர் கோயிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
2. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒருசேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.

குசேலன் கதை நமக்குச் சொல்வது என்ன?

அட்சய திருதியை அன்று குசேலனுக்கு கண்ணனின் அருளால் ஏராளமான செல்வம் கிடைத்தது என்று நாம் படிக்கின்றோம். ஆனால், அதில் உள்ள நுட்பமான விஷயத்தை நாம் மறந்து விடுகின்றோம். அவர் கண்ணனை சேவித்த நாள் அட்சய திருதியை. அந்த நாளில் சென்று சேவிக்க வேண்டும் என்று அவர் திட்டமிடவில்லை. கண்ணனிடம் சென்று தன்னுடைய வறுமையை நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவருடைய திட்டம் அல்ல. தன்னுடைய தோழனாகிய கண்ணன் எப்படி இருக்கிறான் என்று பார்த்துக் கொண்டு வரவேண்டும் என்ற நினைப்பிலேயே அவன் புறப்படுகின்றார். அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு துணியில் அவல் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்.அந்த எளிமையான உணவுதான் அவரிடத்தில் கொடுப்பதற்கு இருந்தது.அதை இடுப்பில் கட்டிக்கொண்டு அதன் கண்ணனிடத்திலே கொடுக்கின்றார். இப்பொழுது அவர் கண்ணனிடத்திலே எதுவும் வாங்கவில்லை. இடுப்பில் கட்டியிருந்த அவலை கண்ணன் எடுத்துக் கொண்டதும் அதுவே பற்பல செல்வமாக வளர்ந்தது. இதனுடைய நுட்பமான பொருள் வாங்கினால் வளரும் என்பது அல்ல; கொடுத்தால்தான் வளரும் என்பதே கதையின் மிக முக்கியமான செய்தி.

வேறு என்னென்ன சிறப்பு?

அதுபோல, இந்த அட்சய திருதியை ஆதி சங்கர பகவத்பாதர் “கனகதாரா ஸ்தோத்திரம்’’ பாடி ஒரு ஏழையின் செல்வக்குறையை போக்கி அருளினார். நம்முடைய சாஸ்திரத்தில் பல விஷயங்கள் உண்டு. அதில் ஒரு விஷயம் இந்த அட்சய திருதியை அன்று பல்லிகள் யார் கண்ணிலும் படாமல் இருக்கும் என்று சொல்வார்கள். தவறிப்போய் பல்லிகளை அன்று பார்த்துவிட்டால் நம்முடைய வறுமை தரித்திரம் முதலியவை போய்விடுமாம்.

ஜோதிட ரீதியில் அட்ஷய திருதியை

சித்திரை அமாவாசை கடந்த மூன்றாம் நாள்தான் வளர்பிறை திருதியை,
1. அட்சய திருதியை. அன்று அவசியம் பெற்றோர்களை வணங்கவேண்டும்.
2. தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும்.

காரணம், சித்திரை மாதத்திலே மேஷ ராசியில் சூரிய பகவான் தன்னுடைய முழு சக்தியோடு பிரகாசித்துக் கொண்டிருக்க, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டிருப்பார். ரிஷப ராசி என்பது சந்திரன் உச்ச ராசி. சூரியனுடைய உச்சராசியில் பிதுர் ஆத்ம காரகனான சூரியனும், சந்திரனுடைய உச்சராசியில் மாதுர் கிரகமான சந்திரன் பிரகாசிக்கும் ஒரு அமைப்பு வேறு எந்த நாளுக்கும் கிடையாது என்பதால் அட்சய திருதியைக்கு அவ்வளவு மதிப்பு.
எனவேதான் உத்தர காலாமிர்தம் இயற்றிய காளிதாசன் இந்த திருதியை திதி நாளில் எல்லா விதமான மங்களகரமான காரியங்களும் செய்யலாம் என்று சொல்லுகிறார்.

தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்’ எனப்போற்றுவர்.அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய்ச் சேரும் என்பது ஐதீகம். எனவே, அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை மட்டும் செய்ய வேண்டாம்

பொதுவாக அட்சய திருதியை நாம் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் ஒன்று பத்தாக நமக்கே திரும்பி வரும் என்பதுதான் அட்சயதிருதியை. மறுபடியும் சொல்லுகின்றேன். அட்ஷய திருதியை அன்று எது நன்மையோ, எது தருமமோ, எது புண்ணியமோ அதை மட்டும் செய்யுங்கள். ஒரு நண்பர் தங்கம் வாங்கினால் நல்லது என்று நினைத்தார். காசு இல்லை. வட்டிக்குக் கடன் வாங்கி தங்கம் வாங்கினார். சிறிது காலம் கழித்து வாங்கிய தங்கத்தை விற்றுவிட்டார். நஷ்டம்.

“அட்சய திருதியை அன்று தங்கம்
வாங்கினேன். வளரவில்லையே”
என்றார். நான் சொன்னேன்.
“தங்கம் வாங்குவதற்கு எதை
வாங்கினீர்கள்?”
“கடன் வாங்கினேன்.”
“முதலில் அட்சய திருதியை அன்று வாங்கிய கடன் வளர்ந்துவிட்டது” என்றேன்.
தயவுசெய்து கடன் வாங்கி தங்கம் வாங்காதீர்கள். கடன் வளர்ந்து விடும்.

The post அள்ளித் தரும் அட்சய திருதியை appeared first on Dinakaran.

Related Stories: