இந்திய பங்குச் சந்தைகள் 6வது நாளாக சரிவு: அரசியல் மாற்றம் நிகழும் என கருதி பங்குகள் விற்பனை; முதலீட்டாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி இழப்பு!!

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் 6-வது நாளாக இன்றும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இன்றி வர்த்தகமாகி வந்த நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 842 புள்ளிகள் வரை சரிந்தது. அதே போல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 271 புள்ளிகள் வரை சரிந்து 22050-க்கு கீழ் சென்றது. தொடர்ந்து பங்கு சந்தை இந்த வாரம் முழுவதும் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு பின் அரசியல் மாற்றம் நிகழும் என கருதி தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதும், அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததும், இறக்கத்துக்கு வழிவகுத்தது

வாக்களித்தவர்கள் சதவீதம் குறைந்தது, ஆசிய சந்தைகளின் இறக்கம் ஆகியவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைப்பதாக அமைந்ததும், சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. இவை போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடனேயே சந்தையை அணுகி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி இழப்பு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி நிறுவன பங்குகள் விலை கடந்த 5 நாட்களில் 7 சதவீதம் -சரிவை சந்தித்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை கடந்த 5 நாட்களில் 6 சதவீதம் வரை சரிந்தன. இதனிடையே பாஜக கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, பெரிய மாற்றம் ஏதுவுமின்றி, 83.51 ரூபாயாக உள்ளது.

The post இந்திய பங்குச் சந்தைகள் 6வது நாளாக சரிவு: அரசியல் மாற்றம் நிகழும் என கருதி பங்குகள் விற்பனை; முதலீட்டாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி இழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: