கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பாலவாக்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து அற்றினர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இசிஆர் சாலையில் உள்ள பாலவாக்கம் கடற்கரை எப்போதும் மிக ரம்மியமாக காட்சி அளிக்கக் கூடிய கடற்கரை பகுதி. இசிஆர் சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்லக்கூடிய கலைஞர் கருணாநிதி சாலையில், கடற்கரைக்கு மிக அருகில் பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு உள்ளது. வசதி படைத்தவர்கள் வாழக்கூடிய தெரு என்பதால், இங்கு வசிக்கக்கூடியவர்கள் சேர்ந்து குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்றை அமைத்துள்ளனர். மேலும், இந்த தெரு 15 அடி அகலம் கொண்டது. நல்ல விசாலமான இட அமைப்பு கொண்ட தெருவில் சென்னை மாநகராட்சி மூலம் தெருவிளக்குகள் அமைத்து, தரமான சாலை அமைத்து அழகுபடுத்தப்பட்ட தெருவாகும். ஆனால் இந்த சாலையை தெருவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற வகையிலும் தெரு குடியிருப்புவாசிகள் செயல்பட்டு வந்தனர்.

அதோடு, கடற்கரைக்கு வருபவர்கள் தங்களது தெரு வழியாக செல்வதை அவர்கள் விரும்பவில்லை. மேலும், பாலவாக்கத்தையும், கொட்டிவாக்கத்தையும் இணைக்கும் சாலையாக இந்த சாலை உள்ளது. அதோடு, மயானத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. ஆனால், இந்த தெருவை பொதுமக்கள் உபயோகப்படுத்தினால் தங்களுக்கு தொல்லை தான் என நினைத்து வருகின்றனர். பொது வழியாக பயன்படுத்தக்கூடிய பல்கலை நகர் 3வது குறுக்கு தெருவின் ஒரு புறத்தை அப்படியே ஆக்கிரமித்து, சிமென்ட் பைப்புகளை வரிசையாக நட்டு வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். இதனால் மயானத்திற்கு உடல்களை எடுத்துச் செல்பவர்களும், கடற்கரைக்கு செல்பவர்களும், கலைஞர் கருணாநிதி சாலைக்கு செல்பவர்களும் இந்த தெரு வழியாக செல்ல முடியாமல் பல தெருக்களை சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் தெருவில் தனிச்சையாக அமைக்கப்பட்ட தடுப்பை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், கலைஞர் கருணாநிதி சாலையில் இருந்து இந்த தெருவுக்குள் வந்த நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தடுப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால், மீண்டும் ரிவர்சில் தான் வர வேண்டும். அந்த அளவுக்கு தெருவின் இருபுறமும் தங்கள் வாகனங்களை அங்கு வசிப்பவர்கள் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். பல கட்ட போராட்டத்துக்கு பின்பும் தடுப்பு அகற்றப்படாமல் இருந்தது அப்பகுதி மக்களை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது. இந்நிலையில், குடியிருப்போர் நலச்சங்கத்தினரால் ஆக்கிரமித்து பல்கலை நகர் 3வது குறுக்கு தெருவில் அமைக்கப்பட்ட தடுப்புகள் குறித்த செய்தி தினகரன் நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக, சென்னை மாநகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் முரளி, கொட்டிவாக்கம் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, பாலவாக்கம் உதவி பொறியாளர் ஹேமமாலினி ஆகியோர் தலைமையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட தெருவுக்கு நேற்று காலை சென்றனர். பல்கலை நகர் 3வது குறுக்கு தெருவில் தன்னிச்சையாக அத்துமீறி அமைக்கப்பட்ட தடுப்பு குறித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தெருவை ஆக்கிரமித்து எப்படி தடுப்பு ஏற்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பி எச்சரித்தனர். இதையடுத்து, வரிசையாக நட்டு வைக்கப்பட்டிருந்த சிமென்ட் தடுப்புகளை இயந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர்.

இதற்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம் பொதுமக்கள் திரண்டு, ஒரு தெருவில் தன்னிச்சையாக எப்படி தடுப்பு ஏற்படுத்தலாம் என்று சென்ைன மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆதரவாக களம் இறங்கினர். இதையடுத்து பாதுகாப்பு கருதி போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஒரு தெருவை ஆக்கிரமித்து தடுப்பு ஏற்படுத்துவது சட்டபடி குற்றம் என்றும், மீண்டும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். தடுப்பு அகற்றப்பட்டதால் அந்த தெரு வழியாக வாகன ஓட்டிகள் எளிதாக சென்று வருகின்றனர். பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, நன்றியும் தெரிவித்தனர்.

The post கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: