பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் வென்றவர் பாஜ முதல் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்: இன்று உடல் தகனம்

நாகர்கோவில்: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் நேற்று மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடக்கிறது. குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் (73). பாஜவை சேர்ந்த இவர், தமிழகத்தில் பாஜ முதல் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றவர். பாஜ மாநில துணைத்தலைவராக இருந்த வேலாயுதன் 2006க்கு பின் அரசியலில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் செயலாற்றினார். இவரது வீடு, நாகர்கோவில் அருகே கருப்புக்கோடு பகுதியில் உள்ளது. வேலாயுதனின் மனைவி ஜெகதாம்பிகா சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கருப்புக்கோட்டில் உள்ள தனது சொந்த வீட்டை மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக வழங்கி விட்டு நாகர்கோவிலில் சேவாபாரதி சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லத்தில் தங்கியிருந்தார். பின்னர் திருவனந்தபுரத்தில் வசிக்கும் மகனுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் ஒரு கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான கருப்புக்கோட்டுக்கு வேலாயுதன் வந்திருந்தார். அங்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் இன்று காலை 10 மணி அளவில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

வேலாயுதன் தனது 13 வயதில் 1963ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். 1982ல் மண்டைக்காடு கலவரம் ஏற்பட்டபோது இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 1989ல் முதல் முறையாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் தனது 39-வது வயதில் போட்டியிட்டு தோற்றார். 1991 தேர்தலிலும் தோல்வியடைந்தார். 3வது முறையாக 1996 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று பாஜ முதல் பாஜ எம்எல்ஏவாக தமிழக சட்டசபைக்கு சென்றார். பின்னர் 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார்.

The post பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் வென்றவர் பாஜ முதல் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்: இன்று உடல் தகனம் appeared first on Dinakaran.

Related Stories: