‘தென்னிந்தியாவின் வலிமையான பெண்’ பட்டத்தை வென்றார் பளு தூக்கும் போட்டியில் அசத்திய 82 வயது மூதாட்டி

பல்லடம்: 82 வயதிலும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று தென்னிந்தியாவின் வலிமையான பெண் என்ற பட்டத்தை வென்று மூதாட்டி அசத்தி உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்துகவுண்டர் அவென்யுவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள் (82). இவர் மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோர் பல்லடம் மகாலட்சுமி அவென்யூவில் வசித்து வருகின்றனர். ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். வார இறுதி நாட்களில் பாட்டி கிட்டம்மாள் பல்லடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்லும்போது தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசைபட்டுள்ளார்.

இரண்டு பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பேரன்களோடு உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளார். அங்கு 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பாட்டியின் ஆர்வத்தைக் கண்டு உடற்பயிற்சியாளர் சதீஷ், கோவையில் கடந்த மே ஒன்றாம் தேதி ‘இந்திய உடற்பயிற்சி கூட்டமைப்பு’ சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு பாட்டியை அழைத்து சென்றுள்ளார். இந்த போட்டியில் பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து ‘தென்னிந்தியாவின் வலிமையான பெண்-2024’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து கிட்டம்மாள் கூறும்போது, ‘எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும், எனது ஆர்வத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தனது உணவு முறையே காரணம், பேரன்கள் மற்றும் உடற்பயிற்சியாளரின் துணையோடு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றதாகவும், கம்பங்கூழ், காய்கறி சூப், பேரிச்சம்பழம், முந்திரி போன்ற உணவு முறைகளை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தார். 82 வயதிலும் மனம் தளராமல் திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற கிட்டம்மாளுக்கு சமூக வலைதளங்களிலும், உடற்பயிற்சி கூடத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

The post ‘தென்னிந்தியாவின் வலிமையான பெண்’ பட்டத்தை வென்றார் பளு தூக்கும் போட்டியில் அசத்திய 82 வயது மூதாட்டி appeared first on Dinakaran.

Related Stories: