விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் மீண்டும் சிசிடிவி கேமரா செயலிழப்பு: மதுரையிலும் ஒரு மணி நேரம் இயங்கவில்லை

விழுப்புரம்: விழுப்புரம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மீண்டும் சிசிடிவி கேமரா இயங்கவில்லை. மதுரையிலும் ஒரு மணி நேரம் கேமரா இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவான 3500க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 314 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த யூபிஎஸ் பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன. பின்னர் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்து செயலிழந்த சிசிடிவி கேமராக்கள் இயங்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று மீண்டும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் காலை 7.28 மணி முதல் 8.05 வரை இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை விழுப்புரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வாக்கு எண்ணும் மையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விழுப்புரம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் பழுதானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்ததும் உடனடியாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு செயலிழந்த சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கியது. இதேபோல், மதுரை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 260 சிசிடிவி கேமராக்கள் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி, நுழைவு வாயில் என பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் திடீரென மழை பெய்தது. அப்போது 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவாயில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பல சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதாகின. இதுகுறித்த தகவல் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சங்கீதாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் விரைந்து வந்த கலெக்டர் சீரமைப்பு பணிளை துரிதப்படுத்தினார். சுமார் ஒரு மணி நேரத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

The post விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் மீண்டும் சிசிடிவி கேமரா செயலிழப்பு: மதுரையிலும் ஒரு மணி நேரம் இயங்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: