சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ பாடப்பிரிவை விரும்பி படிக்க வேண்டும்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி

சென்னை,மே 9: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அளித்த பேட்டி: ஐஐடி மெட்ராஸ் வரலாற்றிலேயே ரூ500 கோடிக்கும் மேல் முதல் முறையாக நிதி திரட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட 135 சதவிகிதம் அதிகம். 2020-21ல் ரூ 101 கோடி, 2021-22ல் ரூ131 கோடி, 2022-23ல் ரூ 231 கோடி, 2023-24ல் ரூ 513 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. நிதி திரட்டல் பொறுத்தவரை நாங்கள் நம்பியது 10 முதல் 15 சதவிகிதம் வளர்ச்சிதான். ஆனால், 135 சதவிகித வளர்ச்சி என்பது மிகவும் மகிழ்வான ஒன்று. வெளி நாட்டில் முதல் முறையாக தொடங்கப்பட்ட ஐஐடி மெட்ராஸ் வளாகம், விளையாட்டு வீரர்களுக்கான திட்டம் இவை அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இந்த வருடம் ரூ513.38 கோடியில் ரூ318 கோடி முன்னாள் மாணவர்கள் நன்கொடையாகும். இந்த வருடமே ரூ718 கோடி முதலீடுகளுக்கு நாங்கள் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்.

இதன் மூலம் அடுத்த வருடம் ஐஐடி மெட்ராசுக்கு ரூ280 கோடி வருமானம் இருக்க கூடும். இந்த வருடம் 1072க்கு மேற்பட்ட நன்கொடையாளர்கள் வந்துள்ளனர், அடுத்த வருடம் 2000 ஆக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த வருடம் ஜே.இ.இ. தேர்வெழுதி தரவு அறிவியல் துறைக்கு விண்ணப்பித்து இருந்த 2.5 லட்சம் மாணவர்களுக்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம். மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் யுஜி உடற்கூறு ஆய்வு மையம் அமைக்கப்படும். சப்ளை செயின், ஐஐடி மெட்ராஸ் எனர்ஜி சேவிங், மின்னணு இயக்கம் உருவாக்கம் உள்ளிட்டவைகளுக்கான ஆய்வு மையங்கள் அமைக்க வேண்டி, தனியார் நிறுவனங்கள் நிதி வழங்கியுள்ளனர்.

ஐஐடியில் படித்தவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை என்ற தவறான தகவல் பரவி வருகிறது. இதை மக்கள் நம்ப வேண்டாம். படித்த எல்லோருக்கும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது. அனைத்து துறை சார்ந்த பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் பாடப் பிரிவில் ஒன்றை தேர்வு செய்து அதனை பிரதானமாக வைத்து ஏஐ படிப்பை கோர்சாகவோ அல்லது டூயல் டிகிரி ஆகவோ படிக்கலாம்.

The post சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ பாடப்பிரிவை விரும்பி படிக்க வேண்டும்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: