அகிலேஷ் வழிபாடு செய்துவிட்டு சென்ற பின் கோயிலை கங்கை நீரால் கழுவிய பாஜகவினர்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்

கன்னோஜ்: அகிலேஷ் யாதவ் வழிபாடு செய்துவிட்டு சென்ற பின்னர், கோயிலை கங்கை நீரால் பாஜகவினர் கழுவிய சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், கன்னோஜ் தொகுதியின் சமாஜ்வாதி வேட்பாளருமான அகிலேஷ் யாதவ், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன், சித்தபீத் பாபா கவுரி சங்கர் மகாதேவ் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அவர் பூஜைகளை முடித்துவிட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறினார்.

அதன்பின் அங்கிருந்த பாஜகவினர், கோயில் வளாகத்தை கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக நகரத் தலைவர் சிவேந்திர குமார் குவால் கூறுகையில், ‘அகிலேஷுடன் வந்த சிலர் காலணி அணிந்தவாறு கோயிலுக்குள் நுழைந்தனர். அதுமட்டுமின்றி கோயில் வளாகத்தில் எச்சில் துப்பினர். இந்து மதத்தை சாராத பிற மதத்தினரும் கோயிலுக்குள் வந்தனர். அவ்வாறு வருவதற்கு கோயிலில் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே கோயில் வளாகத்தை கங்கை நீரை கொண்டு தூய்மை படுத்தினோம்’ என்றார். இவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சமாஜ்வாதி மூத்த தலைவர் ஐ.பி.சிங் வெளியிட்ட பதிவில், ‘அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், பாஜகவினர் கோயில் வளாகத்தை கங்கை நீரில் கழுவியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களில் வழிபாடு செய்ய உரிமை இல்லை என்ற கொள்கையை பாஜக பின்பற்றுகிறது’ என்று குற்றம்சாட்டினார்.

The post அகிலேஷ் வழிபாடு செய்துவிட்டு சென்ற பின் கோயிலை கங்கை நீரால் கழுவிய பாஜகவினர்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: