பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் வென்றவர்: பாஜ முதல் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்: நாளை உடல் தகனம்

நாகர்கோவில்: தென்னிந்தியாவின் முதல் பாஜ எம்எல்ஏ வேலாயுதன் இன்று காலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடக்கிறது. நாகர்கோவில் அருகே உள்ள கருப்புக்கோடு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன் (73). பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ. தென்னிந்தியாவின் முதல் பா.ஜ. எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றவர். மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்த வேலாயுதன் 2006க்கு பின் அரசியலில் இருந்து விலகி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இயங்கினார். இவரது மனைவி ஜெகதாம்பிகா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நிவேதிதா, சிவநந்தினி என்ற மகள்களும், ராம்பகவத் என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

சேவாபாரதி சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கு தற்காலிகமாக இடம் தேவைப்பட்டதை அடுத்து கருப்புக்கோட்டில் உள்ள தனது சொந்த வீட்டை சில ஆண்டுகள் வழங்கியிருந்தார். அதனால் நாகர்கோவிலில் சேவாபாரதி சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லத்தில் தங்கியிருந்தார். பின்னர் மகனுடன் தங்கியிருந்தார். அவ்வப்போது குமரி மாவட்டத்தில் நடக்கும் பாஜ நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்பார்.

இந்நிலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான கருப்புக்கோட்டுக்கு வேலாயுதன் வந்திருந்தார். இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவரது உடல் நாளை காலை 10 மணி அளவில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு பாஜ மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வேலாயுதன், தனது 13வது வயதில் 1963ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். 1982ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரம் ஏற்பட்டபோது இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 1989ல் முதல் முறையாக பத்மநாபபுரம் தொகுதியில் தனது 39-வது வயதில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 3வது முறையாக 1996 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தென்னிந்தியாவில் முதல் பாஜ சட்டமன்ற உறுப்பினராக தமிழக சட்டசபைக்கு சென்றார். பின்னர் 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார்.

The post பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் வென்றவர்: பாஜ முதல் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்: நாளை உடல் தகனம் appeared first on Dinakaran.

Related Stories: