கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் கொண்டாட்டம் வீரபாண்டி சித்திரைத் திருவிழா துவங்கியது

*காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பரவசம்

*பாதுகாப்பு பணியில் 1340 போலீசார்

தேனி : தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று அதிகாலை முதல் கோலாகலமாக துவங்கியது.தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன்கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் இறுதி வாரம் எட்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் தேனி மாவட்டமட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரை விழாவில் கலந்து கொள்வர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இதனையடுத்து, நேற்று அதிகாலை முதலாக அம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தவர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதைத் தொடர்ந்து நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண்பானை எடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல் என பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக கோயிலில் குவியத் துவங்கினர்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவிழாவையொட்டி தேனியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உப்புக்கோட்டை பிரிவு தொடங்கி உப்பார்பட்டி பிரிவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.
திருவிழாவையொட்டி மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிறப்புபேருந்துகளை அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டன.

நேற்று அதிகாலை முதல் தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக உத்தமபாளையம், கம்பம், குமுளி செல்லும் வாகனங்கள் உப்புக்கோட்டைபிரிவு வழியாக குச்சனூர், மார்க்கையன்கோட்டை பிரிவு வழியாக சின்னமனூருக்கும், குமுளி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூரில் இருந்து தேனிக்கு வரும் வாகனங்கள் உப்பார்பட்டி பிரிவில் இருந்து தப்புக்குண்டு, தாடிச்சேரி, கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூர் வழியாக தேனிக்கும் வழித்தடத்தில் மாற்றம் செய்து பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளை நிறுத்துவதற்காக உப்புக்கோட்டை பிரிவு அருகிலும், ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்புபேருந்துகளில வரும் பக்தர்கள் இத்தற்காலிக பஸ்நிலையத்தில் இறங்கி கோயிலுக்கு வந்தனர்.

பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லை

கோயிலுக்கு வரும் வழிநெடுகிலும் பேன்சிக்கடைகள், உணவுப்பொருள் விற்பனைக் கடைகள் நிரம்பியிருந்தன. இதுதவிர கோயிலுக்கு வரும் பக்தர்கள்அம்மனை வழிபட்ட பிறகு பொழுதுபோக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் வளாகத்தில், தனியார் மூலம் பொழுதுபோக்கு அம்சங்களான 26 வகையான ராட்டினங்கள், பனிப்பிரதேசம், செயற்கை வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் கோயிலுக்கு அம்மனை வழிபட வந்த பக்தர்கள் வழிபாடு முடிந்ததும், குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு பகுதிக்கு வந்து உற்சாகமாக விளையாடி சென்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சித்திரைத் திருவிழாவையொட்டி தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி சிவபிரசாத் தலைமையில், 3 ஏடிஎஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1340 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவின்போது, சட்டம்,ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு, கண்காணிக்கும் வாயில் கோயில் முன்புறம், பின்புறம், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள பகுதி, ஆற்றுப்பகுதி, கன்னீஸ்வரமுடையார் கோயில், முல்லையாற்று பாலம் என 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

மேலும், விழா நடக்கும் பகுதிகளை கண்காணிக்க 60 கண்காணிப்பு கேமிரக்கள் கோயில் பகுதி, கடைவீதி, முல்லையாற்றுப்பாலம், கோயிலின் முன்பாகவும், பின்பிறமும், தேனி கம்பம்சாலையிலும், தற்காலிக பஸ் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புக் கட்டுப்பாட்டுஅறையில் தகவல் தொழில்நுட்ப போலீசார் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் வளாகத்தில் 3 ஷிப்டாகவும், கோயில் வெளிப்புறப்பகுதியில் போலீசார் 2 ஷிப்டாகவும் பிரித்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களின் கூட்டம், முல்லையாறு, கன்னீஸ்வரமுடையார் கோயில் பகுதியில் நிரம்பியிருந்தது. இப்பகுதியில் இருந்து பக்தர்கள் நீராடிய பின்னர் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

கோயிலுக்குள் பக்தர்களின் நெருக்கடியை தவிர்க்க தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசிக்க தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருந்த நிலையில் 12 மணிக்கு மேல் மாலை 3 மணி வரை சற்றே கூட்டம் குறைவானது. பின்னர், மாலை 3 மணியில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

சுகாதாரத்துறை சார்பில் முகாம்

கவுமாரியம்மன் கோயில் அருகே சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சார்பில் டாக்டர்கள் முத்தமிழ், சங்கர்ராஜ், செந்தில்குமரன் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு நிலவேம்பு ஊரல் நீர், எலுமிச்சை புதினா ஊரல் நீர், எலுமிச்சைதிருநீர்பச்சிலை விதை ஊரல் நீர், வெட்டி வேர் நீர் ஆகியவற்றை பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தவிர்க்க வழங்கப்பட்டது. கோயிலுக்கு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததையொட்டி, வீரபாண்டி கோயில் அருகே உள்ள முல்லையாற்று தடுப்பணையில் நூற்றுக்கணக்கானோர் நீராடி மகிழ்ந்தனர். இதனால் ஆற்றிலும், தடுப்பணை பகுதியிலும் மனித தலைகளாகவே காட்சியளித்தது.

மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

வருகிற 10ம் தேதி சித்திரைத் திருவிழாவையொட்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம் நடக்க உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள், கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உள்ளூர் விடுமுறை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.

The post கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் கொண்டாட்டம் வீரபாண்டி சித்திரைத் திருவிழா துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: