செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வெயில் தாக்கத்தால் தென்னங்கீற்று பயன்பாடு அதிகரிப்பு

செம்பனார்கோயில் : நம் முன்னோர்கள் தென்னங்கீற்றுகளால் ஆன குடிசை வீடுகளில் தான் வசித்து வந்தனர். இதனால் சீதோசன நிலைக்கேற்ப உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள், கோடைக்காலங்களில் சரியான காற்றோட்ட வசதி இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இதனால் தென்னங்கீற்றுகளின் பயன்பாடு குறைந்து, இந்த தொழிலில் ஈடுபடுவோர் மாற்று தொழிலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலமாக இருப்பதால் தென்னங்கீற்றுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தென்னங்கீற்றுகளை முடைந்து விற்பனை செய்யும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆறுபாதி ஊராட்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னங்கீற்றுகளை முடைந்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மேற்கண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளி ராஜேந்திரன் என்பவர் கூறியதாவது:-

ஆறுபாதி ஊராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலானோர் தென்னங்கீற்று முடையும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கத்திரி வெயில் வாட்டி வதைப்பதால் தென்னங்கீற்றுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

நாங்கள் தென்னங்கீற்று முடைவதற்கு தேவையான தென்னை மட்டைகளை, திண்டுக்கல், கம்பம், தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம். இந்த தென்னை மட்டைகளை ரூ.1.20-க்கும், சீசன் காலங்களில் கூடுதலாகவும் கொள்முதல் செய்கிறோம். கொள்முதல் செய்யப்பட்ட தென்னை மட்டைகளை தென்னங்கீற்றுகளாக முடைந்து விற்பனை செய்வோம். தற்போது கோடைக் காலமாக இருப்பதால் தென்னங்கீற்று ஒன்று ரூ.10 முதல், ரூ.12 வரை விற்பனை செய்து வருகிறோம். இங்கு முடைந்து விற்பனை செய்யப்படும் தென்னங்கீற்றுகளை பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் தென்னங்கீற்று பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த தொழிலை பாரம்பரியமாக செய்து வருகிறோம். எனவே பொதுமக்கள், தென்னங்கீற்றுகளை வாங்கி பயன்படுத்தி நன்மை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வெயில் தாக்கத்தால் தென்னங்கீற்று பயன்பாடு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: