அம்மூர் காப்புக்காடு பகுதியில் போர்வெல்லில் இருந்து சோலார் பேனல் மூலம் தொட்டியில் வனவிலங்குகளுக்கு நீர் நிரப்ப ஏற்பாடு

ராணிப்பேட்டை : அம்மூர் காப்புக்காடு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் சோலார் பேனல் மூலம் தொட்டியில் விலங்குகளுக்கு நீர் நிரப்ப ஏற்பாடு செய்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் காப்புக்காடு, பாணாவரம் காப்புகாடு, அரக்கோணம் அடுத்த அம்மனூர் காப்புகாடு, ஆற்காடு புங்கனூர் காப்புக்காடு என 4 காப்புகாடுகள் உள்ளன.

இந்த காப்புக்காட்டில் மான், குரங்கு, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கோடை காலங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்புவது வழக்கம்.

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிப்பதால் வனப்பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தண்ணீரின்றி தவிக்கும் வன விலங்குகள் ஊர்களுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.

எனவே வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக, சில நாட்களாக வனவிலங்கு ஆர்வலர் உதவியுடன், வனத்துறையினர் டிராக்டர் மூலம் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறுவது வெகுவாக குறைந்துள்ளது. மழை பெய்து தண்ணீர் கிடைக்கும் வரை, தொட்டிகளில் தொடர்ந்து லாரி மற்றும் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் வனப்பகுதிகள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்காக, வனத்துறையினர் சுழற்சி முறையில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்முறையாக அம்மூர் காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் அருந்த கட்டப்பட்டுள்ள 6 தொட்டிகளுக்கு சோலார் பேனல் மூலம் போர்வெல்லில் இருந்து தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ரோந்து செல்லும் வனவர்கள் கண்காணித்து மோட்டார் போட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்புகின்றனர். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள விலங்குகளுக்கான தொட்டிகளுக்கு டிராக்டர் மூலம் தொடர்ந்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த திட்டம் தமிழகத்தின் சில வனப்பகுதிகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து வனப்பகுதிகளிலும் கோடை காலத்தில் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அம்மூர் காப்புக்காடு பகுதியில் போர்வெல்லில் இருந்து சோலார் பேனல் மூலம் தொட்டியில் வனவிலங்குகளுக்கு நீர் நிரப்ப ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: