சேலம் ஜி.ஹெச்சில் பணியில் இருந்த செங்கல்பட்டு மருத்துவர் கழிவறையில் சடலமாக மீட்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் இருதய நோய் பிரிவு மருத்துவர் மர்மமான முறையில் கழிவறையில் சடலமாக கிடந்தார். செங்கல்பட்டு மாவட்டம் ஓணம்பாக்கம் கீழ்கரணை கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் அருணகிரி (33). இவர், சேலம் அரசு மருத்துவமனையில் இருதய நோய் பிரிவில் டாக்டராக பணியாற்றிக்கொண்டு முதுநிலை மருத்துவ கல்வி 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது மனைவி டாக்டர் நந்தினி. இவர்கள், சேலம் வின்சென்ட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

டாக்டர் அருணகிரி, நேற்று காலை 8 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். 9.30 மணியளவில் இருதய நோய் பிரிவு வார்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. மாலை 3.30 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் அருணகிரியின் கார் நின்றுள்ளது. இதனால் அவர், வீட்டிற்கு செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். அதன்பிறகே அவரை தீவிரமாக தேடத்தொடங்கினர்.

இருதய நோய் பிரிவில் உள்ள பொதுகழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அதில் ஒரு கழிவறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், அந்த கழிவறை பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கழிவறைக்குள் தலைகுப்புற மருத்துவர் அருணகிரி விழுந்து கிடந்தார். அவரை தூக்கி பரிசோதித்து பார்த்ததில், இறந்திருந்தார். உடனே சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் சென்று, மருத்துவர் அருணகிரியின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, உடன் பணியாற்றிய மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், மருத்துவர் அருணகிரி காலை 9.30 மணியளவில் கழிவறை செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அவர் அங்கிருந்து வேறு வார்டுக்கு நோயாளிகளை பார்க்க சென்றிருப்பார் என கருதி அவரை உடனடியாக யாரும் தேடவில்லை. ஆனால், அவர் கழிவறையிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார், மாலையில் அவரது கார் நின்றிருந்ததை பார்த்து சந்தேகப்பட்டு தேடியபோதுதான் அவர் இறந்தது தெரியவந்தது. கழிவறைக்கு சென்ற மருத்துவர் அருணகிரி, திடீர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

The post சேலம் ஜி.ஹெச்சில் பணியில் இருந்த செங்கல்பட்டு மருத்துவர் கழிவறையில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: