கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளில் வடமாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேரை கைது செய்த தமிழ்நாடு அரசுக்கு, ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடந்த 2020ம் ஆண்டு காரில் கடத்தி வரப்பட்ட 423 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் மாவட்டம், பிச்சாணிக்கோட்டை அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, சிவகங்கை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 144 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், உசிலம்காடு பகுதியைச் சேர்ந்த பரிமளாதாஸ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன்கோரி பரிமளாதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2021 முதல் 2024ம் ஆண்டு வரை ஒடிசா, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது பல கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் தொடர்ந்து போதைப்பொருட்கள் கடத்தும் குற்றவாளிகளாக உள்ளனர். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றத்தை சமூகத்திற்கு எதிரான குற்றமாக பார்க்க வேண்டும். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் துரிதமான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்.

அதேநேரம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமின்றி, தொடர்புள்ள அனைவரையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கு விசாரணை முழுமையாக வெற்றியடையும். இதற்கு தேவையான பயிற்சியை நுண்ணறிவுப் பிரிவினருக்கு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட இந்த வழக்கை அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க கூடுதல் டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

The post கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: