மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் வனப்பரப்பு வேகமாக குறைந்து வருவதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் வனப்பரப்பு நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த அச்சுறுத்தலைத் தடுக்கவும், வனப்பரப்பை அதிகரிக்கவும் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து விதைகளை வனத்துறையினர் அதிக எண்ணிக்கையில் சேகரிக்க வேண்டும். அவற்றைக் கொண்டு செடிகளை உருவாக்கி, 4 அடி உயரம் வளர்ந்த பிறகு மாநிலம் முழுவதும் பொது இடங்கள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டுத் திடல்களின் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் நடச் செய்ய வேண்டும்.

திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக்கோயில் வளாகத்தில் இரு மாதங்களில் மட்டும் 7700 மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் அனைத்தையும் இலவசமாக வழங்கியது வனத்துறை தான். இதற்காக வனத்துறைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இதேபோல் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மரக்கன்றுகளை லட்சக்கணக்கில் நடுவதற்கு தமிழக வனத்துறை முயற்சி எடுக்க வேண்டும்.

மரங்களை அதிக அளவில் நட்டு வளர்ப்பதன் மூலம் கோடைக்கால வெப்ப நிலையில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். மேலும், கட்டங்களுக்குள் தேவைப்படும் குளிர்சாதனத் தேவையில் 30 சதவீதத்தை குறைக்க முடியும். இந்த உன்னத நிலையை அடைவதற்காக அரசும், மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப்போட்டுக் கொண்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம். மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றுவோம். அடுத்த பத்தாண்டிலாவது வெப்பத்தின் கடுமையின்றி இதமான வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: