அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?

அறிவு உணர்ச்சி இரண்டும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் உண்டு. மற்ற உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டில் ஒன்று மனிதர்களுக்கு அறிவுணர்ச்சி கூடுதலாக இருப்பது. அதனால் தான் அறிவுணர்ச்சி குன்றியவர்களை “விலங்கோடு மக்கள் அனையர்” என்று வள்ளுவர் சொல்லுகின்றார். அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையேயான போராட்டத்தில்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அறிவுக்கும் உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டின் அமைப்புதான் வாழ்க்கையின் சிக்கல்களையும் தீர்வுகளையும் நிர்ணயிக்கிறது. உணர்ச்சியால் விளைகின்ற வாழ்க்கைச் சிக்கல்களை, அறிவு தீர்த்து வைக்கிறது. அறிவும் சில விபரீதங்களைச் கொண்டு வந்து கொடுக்கிறதே என்று ஒரு கேள்வி எழலாம். ஆனால் உண்மையில் அறிவு தீர்வுகளைத்தான் கொடுக்குமே தவிர, சிக்கல்களைக் கொடுக்காது. சிக்கல்களைக் கொடுக்கக் கூடியதாக இருந்தால் அது உண்மையான அறிவாக இருக்காது. அதனால்தான் வள்ளுவர் அறிவு குறித்து அற்புதமான ஒரு கருத்தை வெளியிடுகின்றார். ‘‘எது ஒன்று நன்மையை நோக்கி நகர்த்துகின்றதோ அதுவே உண்மையான அறிவு.” என்கிறார். ‘‘நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்று வெளிப் படையாக சொல்லுகின்றார். (‘‘சென்ற இடத்தால் செலவிடாது; தீது ஒரீ இ நன்றின்பால் உய்ப்பது அறிவு’’) ஆனால் பெரும்பாலும் மனிதர்களுக்கு உணர்ச்சிதான் அறிவை அடக்குகின்றது. அறிவைப் புறம் தள்ளுகின்றது.

அறிவின் துணையை நாடாமல் புறக்கணிக்கிறது. உணர்ச்சி பொங்குகின்றபொழுது, எப்படி அடுப்பில் நெருப்பு பொங்கினால் அதை சற்று நீர்விட்டு தணிக்கிறோமோ, அதைப் போல் அறிவு என்னும் நீரால் உணர்ச்சியின் அதீத வேகத்தை அணைக்க வேண்டும். இராமாயணத்தில் தசரதனாக இருக்கட்டும், கைகேயியாக இருக்கட்டும் கைகேயினுடைய தாதியான மந்தரையாக (கூனி) இருக்கட்டும், எல்லோருமே உணர்ச்சி என்னும் நெருப்புக்கு இடம் கொடுத்து அறிவின் துணையை நாடாது அழிவுக்கு காரணமாகிறார்கள். இது ஒரு கோணம். இன்னொரு கோணத்தில் பிரபஞ்சத்தின் சில நிகழ்வுகளுக்கு இப்படிப்பட்ட மனிதர்களும் தேவை என்பதையும் புரிந்துகொண்டால் இந்த நிகழ்வுகள் குறித்து நமக்குப் பரிதாபம் வருமே தவிர கோபமோ விரக்தியோ வராது. ஒரு மனிதன் தவறு செய்வதற்கு மிகப்பெரிய காரணம் அவன் மனதில் ஏற்படுகின்ற அச்சம் (fear). அந்தஅச்சத்திற்கு காரணம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கக்கூடிய இயல்பான சுயநலம் (selfishness).அச்சத்தின் காரணமாகவும் சுயநல உணர்ச்சியின் காரணமுமாகவே மனிதர்கள் பெரும்பாலும் தவறான செயல்களைச் செய்கிறார்கள்; தவறான முடிவுக்கு வருகின்றார்கள். அது அவர்களையும் மற்றவர்களையும் பாதிக்கிறது. இப்படி சுயநல உணர்ச்சியாலும் அச்சத்தினாலும் அவர்கள் சில முடிவுகளுக்கு வருவதற்கு காரணங்கள் பல உண்டு ஒன்று அவர்களை தவறாக முடிவெடுக்க வைக்கக்கூடிய சூழல்கள் இருக்கலாம்.

உண்மையான சூழ்நிலையை அறிவதற்கான பொறுமையோ அவகாசமோ இல்லாமையாக இருக்கலாம். மூன்றாவதாக வேறு ஒருவர் தன் சுயநலத்திற்காக இவர்களது சுயநலத்தையும் உணர்ச்சியையும் தூண்டிவிட்டிருக்கலாம். அப்போதைய அறிவின் குறைபாட்டால், உணர்ச்சியின் வேகத்தினாலும் அவர்கள் அந்தத் தூண்டலுக்குப் பலியாகலாம்.இப்பொழுது அயோத்தியில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் குறித்து நடக்கக் கூடிய செயல்களைப் பாருங்கள். மிகவும் வினோதமாக இருக்கும். ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் என்பது மக்களில் பெரும்பாலோர்க்குத் தெரிகிறது. அவர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் இல்லங்களையும் ஊரையும் அலங்கரிக்கத் துவங்குகிறார்கள்.ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகச் செய்தி அரசவையில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்குத் தெரிகிறது. கோசலைக்கும் சுமத்திரைக்கும் லட்சுமணனுக்கும் தெரிகிறது. ஆனால் கைகேயிக்குத் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட அவளுக்கு முறையாகச் சொல்லப்படவில்லை. பிரச்னைக்கான முதல் முடிச்சு இங்கே விழுகிறது. சரியான நேரத்தில் முன்கூட்டியே சொல்லப்படாத விஷயங்கள் சந்தேகத்துக்கும் அதன் காரணமான கருத்து வேறுபாடுகளுக்கும் அவநம்பிக்கைக்கும் வித்திடுகின்றன.கைகேயியை கொடுமையானவள் என்று ராமாயணத்தினைப் படித்தவர்கள் இகழ்கிறார்கள்.

ஆனால் கைகேயி இத்தனை மோசமாக இகழப்படுவதற்கு உரியவள்தானா என்பதை நினைக்கின்ற பொழுது நமக்கு அவள் மீது பரிதாபமும் அனுதாபமும்தான் ஏற்படுகிறது. கைகேயி சாதாரண பெண் அல்ல. சம்பராசுரன் யுத்தத்தின்பொழுது, தசரதனுக்குத் துணையாக இருந்து வெற்றியைத் தேடித் தந்தவள் என்பதால் அவள் ராஜமாதா கோசலை, மற்றும் சுமித்திரையை விட ராஜரிக நடவடிக்கைகளைத் தெரிந்த வீராங்கனை என்பது புலனாகும். இரண்டாவதாக ஸ்ரீ ராமனை, கோசலை வளர்த்ததை விட, அதிகமாகப் பாசம் காட்டி வளர்த்தது கைகேயிதான். கைகேயி தசரதனுக்கு இளைய மனைவி என்பதால் இயல்பாக அவளிடத்தில் ஒரு கூடுதல் ஈர்ப்பும், பாசமும் இருந்தாலும் கூட, ராமன் பிறந்த பிறகு, ராமனிடத்தில் அன்பு செலுத்தி வளர்த்தவள் என்பதால், கைகேயிடத்தில் இன்னும் கூடுதல் அன்பு தசரதனுக்கு இருந்தது. பெரும்பாலும் தசரதன் கைகேயியின் வீட்டில்தான் இருப்பான். அதற்குக் காரணம் பெரும்பாலும் ராமன் கைகேயியின் அன்பான கண்காணிப்பில்தான் இருப்பான்.ராமனுக்கும் கைகேயிடம் மிகுந்த அன்பு. இதைப் பல இடங்களில் காணலாம். தன் கூடவே சதாசர்வ காலமும் இருந்த இலக்குவனிடம் எத்தனை அன்பு இருந்ததோ அதைவிட கூடுதல் அன்பு, தன்னை வளர்த்த கைகேயியின் பிள்ளையான பரதனிடத்தில் ராமனுக்கு இருந்தது. பரதனை மிக நுட்பமாகப் புரிந்து கொண்டவன் ஸ்ரீ ராமன். அதனால்தான் என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ என்றான்.

‘மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’

என்ற பாடலின் முதல் வரியைப்பாருங்கள். ‘‘மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ?’’ என்றால் என்ன பொருள்? எனக்கு நீ வேறு; தசரதன் வேறு அல்ல என்று பொருள்.நீ உத்தரவிட்டாலும் எனக்கு தசரதன் உத்தரவுதான் என்றால் கைகேயியின் எண்ணத்தை, வாக்கை பூர்த்தி செய்வது தனது தலையாயக் கடமை என்று நினைத்தான். பிறகு ஏன் சிக்கல் வந்தது? அதில்தான் உளவியல் சூட்சுமம் இருக்கிறது.

தேஜஸ்வி

 

The post அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது? appeared first on Dinakaran.

Related Stories: