வார்த்தைகள் தாக்குவதற்கு அல்ல, தாங்குவதற்கே!

ஸ்டான்லி மேற்பார்வையாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் பிறரைக் கேலி பேசுவதற்கு பேர் பெற்றவர். இப்படியாக ஒரு நாள் சக பணியாளர்களுடன் மதிய உணவு உட்கொண்டிருக்கும் பொழுது, தனது மேலாளரை குறித்து மிகவும் மோசமாக கேலி செய்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் மேலாளரின் காதுக்கு எட்டியது, உடனே ஸ்டான்லியை தனது அலுவலக அறைக்கு வரவழைத்தார். மேலாளர் ஸ்டான்லியிடம், நீங்கள் என்னைக் குறித்து மோசமாக கேலிசெய்தது உண்மையா என்று கேட்டார்! ஸ்டான்ட்லியும் தயங்கியபடி ‘‘ஆமாம் என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்றார். உடனே மேலாளர், நீங்கள் எது பேச வேண்டுமானாலும் என் முகத்துக்கு நேராக பேசுங்கள். பின்னால் இருந்து பேசுவதை இன்றுடன் தவிர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் வேலையை இழக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்து அனுப்பினார். மிகவும் அவமானத்துடன் வெளியே வந்த ஸ்டான்லி தன் பணியை செய்ய முடியாத அளவிற்கு அவருடைய இருதயம் காயப்பட்டிருந்தது. தான் செய்த தவறை நினைத்து மிகவும் வருந்தினார்.வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று ஸ்டான்லி தனது படுக்கையறையில் அமர்ந்தபடி, அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து நினைத்து வருந்திக் கொண்டு இருந்தார்.

அவர் மனைவி அவரிடத்தில் வந்து என்ன நடந்தது என வினாவினார். ஸ்டான்லியும் நடந்த சம்பவத்தை விவரித்தார். அவரது மனைவி நீங்கள் செய்தது தவறுதான். நீங்கள் உங்கள் மேலாளரிடம் மன்னிப்பு கோரி விட்டீர்கள். ஆயினும் உங்கள் மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை. அப்படியானால் உங்கள் படுக்கையறையை ஜெப அறையாக்குங்கள். தேவனிடத்தில் உங்கள் தப்பிதங்களை கூறி, மன்னிப்பின் உறுதியை பெறுங்கள் என ஆலோசனை கூறினார்.உடனே ஸ்டான்லி, முழங்கால் படியிட்டு தேவனிடத்தில் தன் தவறுகளையும், தன் இயலாமைகளையும் மனம் திறந்து கூறினார். இயேசுவே, நான் செய்தது தவறுதான் என்னை மன்னித்து விடும். நான் இனிமேல் யார் மனதும் புண்படும் பொருட்டு கேலி, கிண்டல் செய்ய மாட்டேன், மேலும் நான் வேதனைப்படுத்திய சக பணியாளர்கள் அனைவரிடமும் ஒப்புரவாகி விடுகிறேன் என்று பிரார்த்தனை செய்தார். அந்த நிமிடமே அவருடைய இருதயத்தில் ஒரு கடவுளது நிறைவான சமாதானம் ஏற்பட்டது. அடுத்த நாள் அலுவலகத்திற்கு மிக உற்சாகமாகச் சென்றார். இதற்கு முன் தன் வார்த்தையால் யார் யாரைக் காயப்படுத்தினாரோ அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோரி ஒப்புரவானார்.

இறைமக்களே, ஒருவரை கேலிகிண்டல் என்ற பெயரில் அவமரியாதையாகப் பேசுவதும், உடல் பாகங்களை கொச்சைப்படுத்துவதும், அவர்களது இயலாமையை இழிவுபடுத்துவதும் உங்கள் மனதிற்குச் சரியாகப் படுகிறதா? உங்கள் சந்தோஷத்திற்காக அல்லது உங்கள் அபிமானிகளது சந்தோஷத்திற்காக உங்களைப் போன்ற உணர்ச்சிகளை கொண்ட சக மனிதனை வார்த்தைகளால் காயப்படுத்துதலும், சபித்தலும் சகோதர அன்பிற்கு எதிரானது அல்லவா? ஒருவர் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாதபோது ஒரு பேச்சு இதுவா மானிட சிநேகம்?மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! (நீதி. 15:23) மேலும், மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும் (நீதி.12:25) என்று இறைவேதம் கூறுகிறது. ஒருதாய் பிள்ளைகளாக சாதி, மதம், இனம், கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டு சமத்துவம், சமதர்மம் என வேற்றுமையில் ஒற்றுமையுடன் ஒரே சிந்தனையுடன் நல்வார்த்தைகளால் ஒருவரை பாராட்டுவோம். ஆம், நம் வார்த்தைகள் தாக்குவதற்கு அல்ல, தாங்குவதற்கே.

– அருள்முனைவர்.பெவிஸ்டன்.

 

The post வார்த்தைகள் தாக்குவதற்கு அல்ல, தாங்குவதற்கே! appeared first on Dinakaran.

Related Stories: