பிரபஞ்சத்தோடு ஒத்துழைப்பவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

நாம் படிக்கக் கூடிய எந்த ஒரு காவியமோ, புராணமோ, கதையோ, கவிதையோ, ஏதோ ஒரு செய்தியை உட்பொதிந்து நமக்குச் சொல்வதற்காகக் காத்திருக்கிறது. அதைப் புரிந்து கொள்கிறோமா என்பது தெரியவில்லை. ஆனால், புரிந்து கொண்டவர்கள் அந்த விஷயத்தை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள். மிக முக்கியமாக தங்களைச் சுற்றி நடக்கக்கூடிய சம்பவங்கள், எந்த அடிப்படையில் நடக்கின்றன; அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? அதில் நம் பங்கு என்ன என்பதையெல்லாம் புரிந்து கொள்கிறார்கள். இவைகளை மிகச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள், எந்த விஷயத்திலும் அடுத்தவர்களை குறைகூற மாட்டார்கள். இது மிக முக்கியமான விஷயம். இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நம்முடைய நிலை என்பது ஒரு குண்டூசியின் முனையை விடச் சிறியது (micro dot). ஆனால், இந்த உலகத்தில் நடக்கக் கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் நாம் விமர்சிக்கத்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். புரிந்து கொள்வதைவிட விமர்சிப்பதை நாம் பெருமையாகக் கருதுகிறோம். அதற்குக் காரணம், நம்முடைய தன் முனைப்பு, அகங்காரம் (Ego). ராமாயணத்தில் மிகச் சாதாரண பாத்திரங்கள் உண்டு. எதிர்காலத்தில், இதுதான் நடக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு, சாட்சியாக இருக்கக்கூடிய பாத்திரங்களும் (Divine characters) உண்டு. உதாரணமாக, தசரதனை எடுத்துக் கொள்வோம். சாட்சாத் பகவானையே பிள்ளையாகப் பெறக்கூடிய பெருமை படைத்தும், ராமனைப் பரம் பொருளாக, பகவானுடைய அவதாரமாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், விசுவாமித்திர மகரிஷி புரிந்து கொண்டிருக்கிறார். மற்ற மகரிஷிகளும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தசரதனின் குல குருவான வசிஷ்டர் புரிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் தனக்கு ஒரு புத்திரன் பிறக்க வேண்டும் என்று வசிஷ்டரிடம் தசரதன் வேண்டும்பொழுது, வசிஷ்டர் தன்னுடைய ஞான திருஷ்டியினால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யூகிக்கிறார். தேவர்களிடம், பகவான் தன் அவதாரம் குறித்துப் பேசிய செய்தி வசிஷ்டர் மனதில் ஓடுகிறது.

‘‘மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி.
‘வளையொடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்’
என்றனன்.’’

“பரம்பொருள் பூமியில் அவதாரம் எடுக்கத் திருவுள்ளம் கொண்டிருக்கிறான். அதற்கு அவன் தசரதனைத் தேர்ந்தெடுத்து இருக்கிறான் என்பதை முன்னமே
புரிந்து கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்ய அறிவுறுத்துகிறார். இதோ கம்பன் பாட்டு.

``ஈது, முன் நிகழ்ந்த வண்ணம் என, முனி, இதயத்து எண்ணி,
மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ் ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும்’ என்றான்

இதில் ஒரு நுட்பமான கருத்து இருக்கிறது. தசரதனுக்கு நிச்சயமாக புத்திரப் பேறு இல்லை என்பதை வசிஷ்டர் தெரிந்து கொண்டிருந்தால், தசரதனை புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் ஆலோசனையைச் சொல்லியிருக்க மாட்டார். அதைப் போலவே, விசுவாமித்திரர் தன்னோடு ராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகின்ற பொழுது தசரதன் மறுக்கின்றான். அப்பொழுதும் வசிஷ்டர் தசரதனை சமாதானப்படுத்தி, ராமனைக் காட்டுக்கு அனுப்புகின்றார்.

``பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்.
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே’’.

“உன் மகனுக்கு நன்மைகள் பல நடக்க இருக்கிறது. எனவே தயங்காது விஸ்வாமித்திரரோடு அனுப்பு” என்கிறார் வசிஷ்டர்.அப்படியானால் அடுத்து நடக்கக்கூடிய விஷயங்கள் வசிஷ்டருக்குத் தெரிகிறது. (வசிஷ்டர் போன்ற மகரிஷிகளுக்குத் தெரிகிறது) ஆனாலும், அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாததுபோல் நடந்து கொள்கின்றார்கள். ராமனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது மகரிஷியான வசிஷ்டருக்கு தெரியாமலா இருக்கும்? நிச்சயமாகத் தெரியும். ஆனாலும், அவரால் எதையும் மீற முடியாது. பிரபஞ்ச விதிகளைப் புரிந்து கொண்டவர். அதில் தன்னுடைய பங்கு என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை அவர் மிகக் கச்சிதமாகச் செய்கிறார். இப்படி எதிர்காலத்தைப் புரிந்து கொண்ட பாத்திரங்களும் ராமாயணத்தில் உண்டு. புரிந்து கொள்ளாமல் தாங்கள் எதனால், எப்படி இயக்கப்படுகிறோம் என்பதை உணராமல், உணர்ச்சி வசப்பட்டு செயல்படும் பாத்திரங்களும் உண்டு. பெரும்பாலான பாத்திரங்கள் உணர்ச்சியின் பால் பட்டு செயல்படும் பாத்திரங்கள்தான். அவர்களின் செயல்பாடு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது அப்படித்தான் நடக்க வேண்டும். ஏதோ ஒரு நன்மையை உத்தேசித்து பிரபஞ்சம் வகுத்த விதி இது. இந்த விதியை நன்றாகப் புரிந்து கொண்டு பிரபஞ்சத்தோடு ஒத்துழைப்பவர்கள் பக்குவப்பட்டவர்கள் அவர்கள் எது குறித்தும் விசனப்பட மாட்டார்கள். இன்னொரு கோணத்தில், உலகியலில் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை உளவியல் ஞானத்தின் மூலமாகத் தெரிந்து கொள்வதற்கும் இந்த பாத்திரப்படைப்புகள் நமக்கு உதவுகின்றன. இன்னொரு விஷயம் பாருங்கள். வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை தந்து அப்படியே புரட்டிப்போடும் சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்நிகழ்வுகள் நடைபெறும் முந்தைய வினாடி வரை அதற்கான எந்த முன்னோட்டமும் இருக்காது. ஆழிப் பேரலைக்கு முன்னால் எல்லாம் அமைதியாக இருப்பது போலவே இருக்கும். ராமபிரானின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். பல மனக் குழப்பங்களோடு அன்றுதான் தசரதன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுக்கின்றான். அடுத்த நாள் பூசம். பூச நாளில் தான் ராமனுக்கு பட்டா பிஷேகம். புனர்பூசத்திலிருந்து பூச நட்சத்திரத்திற்குள் சந்திரன் நுழைவதற்குள் அயோத்தியின் நிலை, தசரதனுடைய நிலை, எல்லாம் தலைகீழாக மாறுகிறது. ஆனால், இது குறித்த உள்ளுணர்வு தசரதனுக்கு இருந்ததை தசரதன் வெளிப்படுத்தத்தான் செய்கின்றார். ஆனால், அது எப்படி, எந்த ரூபமாக நடக்கும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தேஜஸ்வி

The post பிரபஞ்சத்தோடு ஒத்துழைப்பவர்கள் கவலைப்பட மாட்டார்கள் appeared first on Dinakaran.

Related Stories: