நீலகிரியில் காலநிலையில் மாற்றம் மீண்டும் வெயில் சுட்டெரிக்கிறது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக வெயில் குறைந்திருந்த நிலையில்,நேற்று மீண்டும் வெயில் சுட்டெரித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் துவக்கம் வரை வெயில் வாட்டியெடுத்தது.மார்ச் மாதம் வரை இரவு நேரங்களில் பனிப்பொழிவும் பகலில் வெயிலும் வாட்டிய நிலையில், பெரும்பாலான இடங்களில் தேயிலை செடிகள் கருகின. மேலும், சிவப்பு சிலந்தி நோய் தாக்கி பல இடங்களில் தேயிலை தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.மேலும், அனைத்து குடிநீர் ஆதாரங்களிலும் தண்ணீர் குறைந்துள்ள நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல மாதங்களுக்கு பின், கடந்த சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஊட்டியிலும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மழை கொட்டியது. பல மாதங்களுக்கு பின் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், கடந்த இரு மாதங்களுக்கு மேல் வெயில் வாட்டி வந்த நிலையில், சூடும் சற்று தணிந்து காணப்பட்டது. மேலும், வானமும் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியைடைந்தனர். ஆனால், நேற்று மீண்டும் ஊட்டியில் வெயில் சுட்டெரித்தது. கடும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகள் தலையில் துணிகளை கொண்டு மூடியும், குடைகளை பிடித்தப்படியும் சுற்றுலா தலங்களில் வலம் வந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரும்பாலான உள்ளூர் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்தனர். பிற்பகல் 3 மணிக்கு மேல் வெயில் சற்று தணிந்து, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

The post நீலகிரியில் காலநிலையில் மாற்றம் மீண்டும் வெயில் சுட்டெரிக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: