பழங்கால கட்டடங்கள் உள்ளதா?: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு..!!

கடலூர்: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபை அருகே உள்ள பெருவெளி இடத்தில் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை தொடங்கியது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த இடத்தினை தானமாக கொடுத்த பார்வதிபுரம் கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இதனிடையே, கட்டுமான பணி தொடங்கும் இடத்தில் பள்ளம் தோண்டியபோது அங்கு தொன்மையான கட்டிடங்கள் இருந்ததற்கான சில எச்சங்கள் இருப்பதாகவும், அது சம்பந்தமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேசமயம் சர்வதேச மையம் கட்டும் பணியை தொடர்ந்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. தொல்லியல்துறை இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும் வரை அப்பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாது என தமிழக அரசின் சார்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பழங்கால கட்டடங்கள் உள்ளதா? என ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் மாநில தொல்லியல்துறையின் ஆலோசகர் தயாளன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை தலைவர் டாக்டர் செல்வகுமார் அடங்கிய 3 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொள்கிறது. இவர்களுடன் அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அறநிலையத்துறை பொறியாளர்கள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.

சத்திய ஞான சபை முன்பு பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குழுவினர் ஆய்வைத் தொடங்கினர். பள்ளத்தில் உள்ள தொன்மையான கட்டிடங்கள் எந்த காலத்தை சேர்ந்தது என ஆய்வு செய்யப்படுகிறது. நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொல்லியல்துறையின் ஆய்வு ஓரிரு நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த ஆய்வுக்கு பிறகு மீண்டும் கட்டுமான பணிகள் துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

The post பழங்கால கட்டடங்கள் உள்ளதா?: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: