தமிழ்நாட்டில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் கேமராக்கள் தடையின்றி வேலை செய்ய சிறப்பு ஏற்பாடு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதிக்கப்படக்கூடிய நபர்கள் எண்ணிக்கை, வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தொடர்பான பணிகள் 20ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் 39 மையங்களில் 24 மணி நேரமும் துணை ராணுவம், சிறப்பு போலீஸ் என மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஊட்டி, தென்காசி உள்ளிட்ட சில வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுது தொடர்பாக புகார்கள் வந்தது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிக வெப்பத்தாலும், மின் இணைப்பு பிரச்னைகளாலும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாக கூடாது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடை பட்டாலும், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள கேமராக்கள் வேலை செய்யும் வகையில் ஜெனரேட்டர்கள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் சான்றிதழ் வழங்கும் பணியில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளார்கள். அந்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் கேமராக்கள் தடையின்றி வேலை செய்ய சிறப்பு ஏற்பாடு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: